Published : 20 Sep 2023 09:50 PM
Last Updated : 20 Sep 2023 09:50 PM
புதுச்சேரி: புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கான திறன் அறி நிகழ்ச்சி துணைநிலை ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. இதில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார். நகர்ப்புற மற்றும் கிராமப்புற பள்ளிகைளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது திறமைகளை இதில் வெளிப்படுத்தினர்.
பரதநாட்டியம், சிலம்பாட்டம், குரலிசை, வாத்திய இசை, கழிவுப் பொருட்களில் இருந்து கலைப் பொருட்கள் செய்வது, அறிவியல் செய்முறைகள் போன்ற திறமைகளை நிகழ்த்திக் காட்டினர். ஆளுநர், மாணவர்களின் திறமைகளைக் கண்டு, மாணவர்களைப் பாராட்டிச் சிறப்பித்தார். ஆசிரியர்களையும், மாணவர்களின் பெற்றோர்களையும் பாராட்டினார். பின்னர் ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது: “இன்று மகிழ்ச்சியான நாள். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளின் திறமை தேடல் நிகழ்ச்சி தொடங்கப்பட்டிருக்கிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆடல், பாடல், இசைக் கருவிகள், விஞ்ஞான செய்முறைகள் என்று இவ்வளவு திறமைகள் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்வது என் வாழ்க்கையில் மிகப்பெரிய பேராக அமையும். அதனால் தான் மருத்துவக் கல்வியில் அவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு கிடைப்பதற்கு பெரும் முயற்சி எடுத்தோம். குழந்தைகள் மீது கவனம் செலுத்துவதற்குக் காரணம் உண்டு. தமிழகத்தில் பிரபல இசை கலைஞரின் 16 வயது மகள் தற்கொலை செய்து கொண்டார். இது பெற்றோருக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும். குழந்தைகளை கண்டித்து வளர்ப்பதை விட கண்காணித்து வளர்க்க வேண்டும் என அடிக்கடி நான் சொல்லுவதுண்டு.
அரசு பள்ளி மாணவர்களின் திறமைகளைக் கண்டறிவது தொடரும். அனைத்து பள்ளிகளிலும் உள்ள மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து இன்னும் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ளும் அளவுக்கு பயிற்சி கொடுத்து கொண்டு வர முடியும். கலை நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க வைப்பது போன்ற வகையில் ராஜ்நிவாஸ் உதவி செய்யலாம்.
எம்எல்ஏக்கள் என்னை வந்து சந்தித்ததை புகார் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. 10 சதவீத இடஒதுக்கீடு அளித்ததற்கு, சந்திராயன் வெற்றிகரமாக நிலவில் காலடி வைத்ததற்கு, ஜி20 மாநாட்டுக்காக பிரதமரருக்கு நன்றி தெரிவித்தோம் என்றனர். சில குறைகள் இருப்பதையும் கூறினார்கள். அதை எனது நிலையில் இருந்து, வரையறைக்கு உட்பட்டு கவனிப்பதாக சொல்லி இருக்கிறேன்.
மக்களுக்கான பல திட்டங்கள் சரியாக செய்யப்பட்டு வருகிறது. சிலருக்கு குறைபாடுகள் இருக்கலாம். அவை சரிசெய்யப்பட வேண்டும் என்பது என்னுடைய கருத்து. எம்எல்ஏக்களும் பேச்சுவார்த்தை மூலம் சரி செய்து கொள்ளலாம் என்று நினைக்க வேண்டும். சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி தரப்படுகிறது. பிரச்சனைகளும் தீர்த்து வைக்கப்படுகிறது.
புதுச்சேரியில் நடைபெற்ற அரசு பணிகளில் குறைபாடுகள் பற்றி இந்திய தணிக்கைக்குழு அறிக்கை ஆராய்ந்த பிறகு கவனிக்கப்படும். நாங்கள் நேர்மையாக பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். குற்றச்சாட்டு இருந்தால் கவனிப்போம். பட்ஜெட் முடிந்தவுடன் ஒரு கூட்டம் நடத்தினோம். எந்த பணமும் திருப்பி அனுப்பக் கூடாது என்று அதிகாரிகளை கேட்டுக் கொண்டேன். ஆக்கப்பூர்வமான நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 33 சதவீத இடஒதுக்கீடு இன்று நடைமுறை சாத்தியமாகி இருக்கிறது.
ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் இதை தீவிரமாக முன்னெடுத்து இருக்கலாம். ஆனால், செய்யவில்லை. இப்போது நடைபெற்று இருக்கிறது. அதற்கு வரவேற்பு தெரிவிப்போம். அதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது நிச்சயமாக பெண்களின் வாழ்க்கையில ஒரு புரட்சியை ஏற்படுத்தும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT