Published : 20 Sep 2023 05:47 PM
Last Updated : 20 Sep 2023 05:47 PM
மதுரை: தென்காசி புளியரை சோதனைச்சாவடி வழியாக 10 சக்கர லாரியில் கனிமம் கொண்டு செல்ல தடை விதிக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த இந்தியன் டிரைவர்ஸ் சொசைட்டி பொதுச்செயலாளர் நாகராஜ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: 'கேரளா மற்றும் தமிழகம் முழுமைக்கும் வாகனங்களை இயக்குகிறோம். கேரளாவின் பெரும்பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால், பெரும்பாலான பகுதி சுற்றுச்சூழல் உணர்திறன் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், குவாரி பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நடக்கும் கட்டுமானப் பணிகள் சாலைப் பணிகள் மற்றும் இதர உள்கட்டமைப்பு பணிகளுக்கு தேவையான கிராவல் ஜல்லிகற்கள். எம்.சாண்ட், குவாரி தூசி மற்றும் மணலுக்கு நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தை சார்ந்துள்ளோம். தமிழகத்தின் உதவி இல்லாமல் கேரளாவின் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியாது. தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு உரிய அனுமதியுடன் கனிமங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்நிலையில், தென்காசி மாவட்டம் புளியரை செக்போஸ்ட் மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் புளியரை காவல் ஆய்வாளர் மற்றும் கனிமவன அதிகாரிகள் உள்ளிட்டோர் 10 சக்கரங்களுக்கு மேல் உள்ள லாரிகளில் கனிமங்கனை கொண்டு செல்ல தடை விதித்துள்ளனர். ஆனால் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை, தேனி மாவட்டம் கம்பம் மெட்டு மற்றும் கோவை மாவட்டம் வாலையார் சோதனை சாவடிகளில் இந்த வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. எனவே தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் இருந்து 10 சக்கரங்களுக்கு மேற்பட்ட வாகனங்களில் புளியரை சோதனை சாவடி வழியாக கனிமங்கள் கொண்டுச் செல்ல தடை விதிக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார் மறுதாரர் வழக்கறிஞர் புகழ்காந்தி வாதிடுகையில், ''மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சக அரசாணைப்படி 35 டன் மற்றும் 55 டன் வரை லாரிகளில் கனிமங்கள் கொண்டுச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உரிய அனுமதியுடன் சட்டபூர்வமாக கனிமங்கள் கொண்டு செல்வதை தடுக்க முடியாது. இதை உச்சநீ திமன்றமும் உறுதி செய்துள்ளது'' என்றார்.
கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, ''தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு அதிகளவில் கனிமங்கள் கொண்டுச் செல்லப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு, சாலை பாதிப்பு ஏற்படுகிறது. தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டப்படி வாகனத்தின் வேகம் மற்றும் எடை அளவை கட்டுப்படுத்தும் அதிகாரிகள் போக்குவரத்து அதிகாரிகளுக்கு உண்டு'' என்றார்.
நீதிபதி உத்தரவு: இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ''தமிழகத்திற்கு கடந்த 2021-22ல் பெரும் கனிமங்கள் மூலம் ரூ.817.52 கோடியும், 2022-23ல் ரூ 1049.22 கோடியும் சிறு கனிமங்கள் மூலம் 2021-22ல் ரூ.365.8 கோடியும், 2022-23ல் ரூ.598.29 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது. ஆனால் 2022-23ல் மட்டும் கர்நாடகாவில் ரூ.5945.77 கோடியும், ஆந்திராவில் ரூ.4756 கோடியும். கேரளாவில் ரூ.317 கோடியும் வருமானம் கிடைத்துள்ளது.
சிறுகனிமங்கள் மூலம் மிக குறைத்த அளவே வருவாய் கிடைத்துள்ளது. உரிமை வரித் தொகை கட்டணம் இருதலைமுறையாக உயர்த்தப்படவில்லை. தற்போது தான் இந்த கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே கனிமவளத் துறை ஆணையர் தரப்பில் உரிய விளக்கமளிக்க வேண்டும். 10 சக்கரத்திற்கு மேற்பட்ட லாரிகளில் கனிமங்கள் கொண்டு செல்லக் கூடாது என்ற உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. அடுத்த விசாரணை நவ. 25-க்கு ஒத்திவைக்கப்படுகிறது'' என உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT