Published : 20 Sep 2023 07:47 PM
Last Updated : 20 Sep 2023 07:47 PM

“லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்தியும் மின் இணைப்பு கிடைக்கல...” - தட்கலில் விண்ணப்பித்து தத்தளிக்கும் விவசாயிகள்

திருச்சி: விவசாய மின் இணைப்பு பெறுவதற்காக தட்கல் முறையில் லட்சக்கணக்கில் பணம் செலுத்தி ஓராண்டுக்கு மேலாகியும் இணைப்பு கிடைக்காததால் விவசாயிகள் அவதியடைந்துள்ளனர். தமிழக அரசின் விவசாய மின் இணைப்பு திட்டத்தைப் பொறுத்தவரை சாதாரண மற்றும் சுயநிதிப் பிரிவில் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இதில், சாதாரணப் பிரிவில் மின்சாரம், மின் வழித்தட செலவு இலவசம். சுயநிதி பிரிவில் மின்சாரம் மட்டும் இலவசம், மின் வழித்தட செலவை விவசாயிகள் ஏற்க வேண்டும். சுயநிதிப் பிரிவில் மின் இணைப்பு பெற ரூ.10 ஆயிரம், ரூ.25 ஆயிரம், ரூ.50 ஆயிரம் என 3 வகைகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சுயநிதிப் பிரிவில் கட்டணம் செலுத்தி பதிவு செய்த பிறகும் மின் இணைப்புக்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு விரைவாக இணைப்பு வழங்குவதற்காக 2018-ல் தட்கல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், 5 குதிரை திறன்(ஹெச்.பி) உள்ள மின் மோட்டாருக்கு இணைப்பு வழங்க ரூ.2.50 லட்சம், 7.50 குதிரைதிறனுக்கு ரூ.2.75 லட்சம், 10 குதிரை திறனுக்கு ரூ.3 லட்சம், 15 குதிரை திறனுக்கு ரூ.4 லட்சம் என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த முறையில் விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த அதிமுக ஆட்சியில் 2018, 2019-ம் ஆண்டுகளில் தலா 25 ஆயிரம் இணைப்புகளும், 2020-ல் 50 ஆயிரம் இணைப்புகளும் வழங்கப்பட்டன. 2021 மார்ச் 31-ம்தேதி நிலவரப்படி 4 லட்சத்து 52 ஆயிரத்து 777 விவசாயிகள் மின் இணைப்புக்காக காத்திருந்தனர். அதன்பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திமுக அரசு அமைந்தவுடன், 2021 செப்டம்பர் 21-ம் தேதி ஒரு லட்சம் இலவச விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “இந்த ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கும் திட்டம் 6 மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும். தமிழகத்தில் நடைபெற்று வரும் திமுக ஆட்சி உழவர்களுக்கானது’’ என தெரிவித்தார். 10 ஆயிரம் பேர் காத்திருப்பு ஆனால், திருச்சி மாவட்டத்தில் மட்டும் 2013-ம் ஆண்டிலிருந்து விவசாய மின் இணைப்புக்காக 10 ஆயிரம் பேர் பதிவு செய்து காத்திருப்பதாக அண்மையில் நடைபெற்ற திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மின்வாரிய அதிகாரிகள் அளித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக தட்கல் திட்டத்தில் கடந்த ஆண்டு பதிவு செய்த 28 விவசாயிகள், நிகழாண்டு 142 விவசாயிகள் என மொத்தம் 170 பேர் காத்திருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.தட்கல் திட்டத்தில் விவசாயிகளுக்கு அதிகபட்சம் 3 மாதங்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால், ஓராண்டுக்கும் மேலாகியும் இன்னும் இணைப்பு வழங்கப்படவில்லை எனவும், முதல்வர் பெருமிதத்துடன் கூறியபடி இதுதான் விவசாயிகளுக்கான ஆட்சியா எனவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தளவாடப் பொருள் தட்டுப்பாடு

இதுகுறித்து தட்கல் திட்டத்தில் விண்ணப்பித்து காத்திருக்கும் விவசாயி ஒருவர் கூறியது: நான் தட்கல் திட்டத்தில் விவசாய மின் இணைப்பு கோரி விண்ணப்பித்து பல மாதங்களாகியும் இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டால், ‘தளவாடப் பொருட்கள் இல்லை. வந்ததும் இணைப்பு தருகிறோம்’ என்று தான் கூறுகிறார்களே தவிர, இதுவரை மின் இணைப்பு தந்தபாடில்லை.

இதுகுறித்து உதவிப் பொறியாளர் அலுவலகம் முதல் முதல்வர் தனிப்பிரிவு வரை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. பல விவசாயிகள் வட்டிக்கு கடன் வாங்கிதான் வைப்புத்தொகை கட்டி உள்ளனர். எனவே, ஆண்டுக்கு ஒரு லட்சம் மின் இணைப்பு வழங்குவதாக கூறும் முதல்வர், தட்கலில் விண்ணப்பித்த விவசாயிகளின் பிரச்சினையை கருணையோடு அணுக வேண்டும் என்றார். நடைமுறைச் சிக்கல்

இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியது: தட்கலில் குறிப்பிட்ட காலத்துக்குள் மின் இணைப்பு கொடுக்க வேண்டும் என்ற எந்த விதியும் இல்லை. சாதாரண, சுயநிதிப் பிரிவில் இருப்பவர்களை காட்டிலும் தட்கலில் விண்ணப்பித்தவர்களுக்கு சீனியாரிட்டியில் முன்னுரிமை வழங்கப்படும். அதேநேரம், தட்கல் திட்டத்தைப் பொறுத்தவரை, நிறைய நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. ரூ.2.50 லட்சம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கும் சில விவசாயிகளின் நிலத்துக்கு சென்று பார்த்தால், அங்கு மின்கம்பங்கள் அமைத்து லைன் கொண்டு செல்ல ரூ.10 லட்சம் வரை மின்வாரியம் செலவு செய்ய வேண்டியுள்ளது.

ஏற்கெனவே கடனில் தத்தளிக்கும் மின்வாரியத்துக்கு இது பெரும் சுமையாக உள்ளது. இதுதான் தட்கலில் மின் இணைப்பு வழங்க தாமதம் ஏற்பட முக்கிய காரணம். தற்போது 50 ஆயிரம் பேருக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது. அதில் தட்கலில்பதிவு செய்து காத்திருப்பவர்களில் பெரும்பாலானோருக்கு இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x