Published : 20 Sep 2023 05:40 PM
Last Updated : 20 Sep 2023 05:40 PM
திருப்பூர்: பொது குடிநீர் குழாய்களை அகற்றிவிட்டு புதிய குடிநீர் இணைப்பு பெற பொதுமக்களை கட்டாயப்படுத்தும் வகையில், வெள்ளகோவில் நகராட்சி பகுதிகளில் ஜல்ஜீவன் திட்ட பணிகள் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக வெள்ளகோவிலை சேர்ந்த ச.மணிகண்டன் என்பவர் கூறியதாவது: வெள்ளகோவில் 2-ம் நிலை நகராட்சி 10-வது வார்டு மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொது குடிநீர் குழாய்களை அப்புறப்படுத்தி, ‘ஜல் ஜீவன் - அம்ருத்’எனும் பெயரில் மத்திய அரசின் திட்டத்தை நடைமுறைப்படுத்த, குழாய்கள் அமைக்கும் பணி வீதிகள் தோறும் நடைபெற்று வருகின்றன.
இந்த திட்டம் பொதுமக்களுக்கு நன்மை தருவதென்றால் அனைவருக்கும் மகிழ்ச்சிதான். மாறாக, இந்த திட்டத்தின் மூலமாக நகராட்சியால் தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள பொது குடிநீர் குழாய்கள் அகற்றப்படும் என்ற அபாயம், பொதுமக்கள் மனதை சூழ்ந்துள்ளது. இதனால் குடிநீருக்கு பொது குழாய்களை மட்டுமே நம்பியுள்ள பலரின் அன்றாட வாழ்வு கேள்விக்குறியாகும்.
கடும் வெயில் காலம் எனில் வாரத்துக்கு ஒரு முறையும், மழை மற்றும் குளிர் காலங்களில் அதிகபட்சமாக வாரத்துக்கு 2 அல்லது 3 முறையும் பொது குழாய்களில் குடிநீர் வருகிறது. ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் எந்தவித சேதமும் ஏற்படாத நிலையில், பழைய இணைப்புகளை துண்டித்துவிட்டு புதிய குழாய்கள் அமைத்து, ஏற்கெனவே இணைப்பு உள்ளவர்களுக்கு இலவச இணைப்பு மற்றும் புதிய இணைப்பு வேண்டுவோர் ரூ.8 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம்? பொது குடிநீர் குழாய்கள் அகற்றப்படுவதன் மூலமாக, ஒவ்வொரு வீட்டினரும் குடிநீர் இணைப்பு பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயம், இந்த திட்டத்தின் வாயிலாக வெள்ளகோவில் நகராட்சி மக்களுக்குஏற்பட்டுள்ளது.
சமீப நாட்களாக பொதுமக்களின் தொழில் உள்ளிட்டவை முடங்கிகடும் சுணக்கத்தை சந்தித்து வரும் நிலையில், வருவாய் குறைந்துள்ள பொதுமக்கள் அதிக பாதிப்பை சந்திப்பார்கள். பொது குடிநீர் குழாய்களை அகற்றி, குடிநீர் இணைப்பு பெற பொதுமக்களை கட்டாயப்படுத்தக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆணையர் கருத்து: வெள்ளகோவில் நகராட்சி ஆணையர் வெங்கடேஷ்வரன் கூறும்போது, "அனைத்து பொதுமக்களிடமும் குடிநீர் குழாய் இணைப்பு பெற வேண்டுமென கூறி வருகிறோம். வெள்ளகோவில் நகராட்சியில் இதுவரை எங்கும் பொது குழாய்களை அகற்றவில்லை" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT