Published : 20 Sep 2023 04:44 PM
Last Updated : 20 Sep 2023 04:44 PM

“நான் விலகப்போவதில்லை” - அமைச்சர்களுக்கு எதிரான வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் திட்டவட்டம்

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், தங்கம் தென்னரசு | கோப்புப் படங்கள்

சென்னை: "தலைமை நீதிபதி அனுமதி பெற்றுதான் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளேன். எந்த வழக்கின் விசாரணையிலிருந்தும் விலகப்போவதில்லை" என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 2006-2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக தங்கம் தென்னரசுவும், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரனும் பதவி வகித்தனர். இந்த காலக்கட்டத்தில், இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இரண்டு தனித் தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

2006-ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் 2010-ம் ஆண்டு மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில் 44 லட்சத்து 59 ஆயிரத்து 67 ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வருமானத்துக்கு அதிகமாக சோ்த்ததாக அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, நண்பர் சண்முகமூா்த்தி ஆகியோா் மீது கடந்த 2011 -ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்தனா்.

இதேபோல 2006-ம் ஆண்டு மே 15 முதல் 2010 ம் ஆண்டு மார்ச் 31 வரையிலான காலத்தில் 76 லட்சத்து 40 ஆயிரத்து 443 ரூபாய் சொத்து குவித்ததாக கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் மீது விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கின் விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தன. இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் மற்றும் அவரது மனைவி உட்பட மூவரையும் விடுவித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவுகளை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யத நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து சீராய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்தார்.இந்த வழக்கில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ.எஸ்.ஆர்.ராமசந்திரன் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்திருந்தார்.

இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, "கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சட்டவிரோதம் என இந்த நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுகிறது. எனவே இந்த வழக்கின் விசாரணையிலிருந்து நீதிபதி விலக வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ரமேஷ், "நீதிமன்றத்தின் கவனத்துக்கு வரக்கூடிய ஒரு விஷயத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தால், அதை எந்த நீதிபதி விசாரிப்பது என்பது குறித்து தலைமை நீதிபதி தான் முடிவு செய்ய வேண்டும்" என வாதிட்டார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, "தலைமை நீதிபதி அனுமதி பெற்றுதான் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளேன். எந்த வழக்கின் விசாரணையிலிருந்தும் விலகப்போவதில்லை. வேண்டும் என்றால், இந்த வழக்குகள் குறித்து உச்ச நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

பின்னர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான வழக்கை நவம்பர் 2-ஆம் தேதிக்கும், அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான வழக்கை நவம்பர் 9-ஆம் தேதிக்கும் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x