Published : 20 Sep 2023 03:36 PM
Last Updated : 20 Sep 2023 03:36 PM
சென்னை: "வருகின்ற அக்டோபர் 9-ம் தேதி காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்ற வளாகத்தின், பேரவை மண்டபத்தில் சட்டமன்றம் கூட இருக்கிறது" என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "வருகின்ற அக்டோபர் 9-ம் தேதி காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்ற வளாகத்தில், பேரவை மண்டபத்தில் சட்டமன்றம் கூட இருக்கிறது. அன்றைய தினம், 2023-24-ம் ஆண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கையினை தமிழக நிதி மற்றும் மேலாண்மைத் துறை அமைச்சர் சட்டமன்றத்தில் அறிமுகம் செய்வார்" என்றார். மேலும், அன்றைய தினம் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தை நடத்தி, கூட்டத்தொடரை எத்தனை நாள் நடைபெறும் என்பது முடிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்
அப்போது அவரிடம் நாடாளுமன்றத்தில், அறிமுகம் செய்யப்பட்டுள்ள மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டால், தமிழகத்திலும் நிறைவேற்றப்படுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றினால், சட்டமன்றத்துக்கும் சேர்த்துதானே நிறைவேற்றுவார்கள். நிச்சயமாக நிறைவேற்றப்படும்” என்றார். மேலும், “அந்தச் சட்டத்தை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதோ என்று செய்தியாளர்களிடம் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பினார்.
“நாடாளுமன்றத்தில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் அறிமுகப்படுத்தியுள்ளனர், அவ்வளவுதான். அது நடைமுறைக்கு வருமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி என்பதால்தான் நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சியினரும் பேசியுள்ளனர்" என்று கூறினார்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா நடைமுறைக்கு வரும் என்று நம்பிக்கையில்லையா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "அப்படி என்றால், 2008-ல் இருந்து அது தொடங்கியிருக்கிறது. மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி காலத்திலும் நிறைய மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலவையில் ஒப்புதல் பெறப்பட்டு, மக்களவைக்கு கொண்டு வரப்பட்டது. இறுதியில், 15வது நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிந்துபோன போது அதுவும் முடிந்துபோய்விட்டது.
இந்த முயற்சியை 2014-ல் பாஜக தலைமையிலான மத்திய அரசு எடுத்திருந்தால் நூறு சதவீதம் நம்பியிருப்போம். இது தேர்தல் வரப்போகிறது, அதற்கு முன்பாக மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு என்று கூறுகின்றனர். தமிழகத்தில் அனைவருமே என்ன சொல்கிறார்கள் என்றால், தமிழக முதல்வர், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் மூலம் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கி, அவர்களது முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இதனால், மகளிருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், இதுபோல 33 சதவீத இடஒதுக்கீடு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாக பேசிக் கொள்கின்றனர்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT