Published : 20 Sep 2023 04:20 PM
Last Updated : 20 Sep 2023 04:20 PM
சென்னை: சென்னை பூங்காக்களில் அமைக்கப்பட்டு வரும் ‘ஸ்பாஞ்ச் பார்க்’ மழைக் காலங்களில் பெரிதும் உதவியாக இருக்கும் என பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பெரும்பாலான மக்களுக்கு பொழுதுபோக்குக்கான இடமாகவும், மகளிர், முதியோர் உடற்பயிற்சி செய்வதற்கு ஏதுவான இடமாகவும் பூங்காக்கள் இருந்து வருகின்றன. மக்கள் வாழ்வியலில் ஒரு அங்கமாக பூங்காக்கள் மாறிவிட்டன.
இவ்வாறான பூங்காக்கள் சென்னையில் சீரிய முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஒப்பந்ததார்கள் மூலமாகவும், நேரடியாக மாநகராட்சி மூலமாகவும், தத்தெடுக்கும் முறைகள் மூலமாகவும் சுமார் 835 பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த பூங்காக்களில் நடைபயிற்சிக்காக நடைபாதை வசதி, உடற்பயிற்சி உபகரணங்கள், குழந்தைகளுக்கு விளையாடுமிடம், யோகா பயிற்சி மேடை, மாலை வேளைகளில் அழகூட்டும் வண்ணமயமான செயற்கை நீரூற்றுகள், ஓய்வெடுக்கும் இருக்கைகள், ஒப்பனை அறைகள், புல்வெளிதரைகள், மரம், செடிகளுடன் கூடிய இயற்கை எழில்மிகுந்த சூழல்என பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் சென்னையை உயர்தர நகரமாக உயர்த்தும் நோக்கத்துடன் பூங்காக்களில் தற்போது ‘ஸ்பாஞ்ச் பார்க்’ எனப்படும் மழைநீர் சேகரிப்பு தொட்டியுடன் கூடிய குட்டைகள் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன. பஞ்சு எப்படி தண்ணீரை உறிஞ்சுமோ, அதேபோல இந்த ஸ்பாஞ்ச் பார்க்குகள் மழைநீரை உறிஞ்சும் தன்மை கொண்டவை.
இதனால் மழைக்காலங்களில் பூங்காக்களிலும், பூங்காவை ஒட்டியுள்ள பகுதிகளிலும் தண்ணீர் தேங்குவது பெருமளவு குறையும் என்றும், உயரம் குறைவான பகுதிகளில் வெள்ளநீர் விரைவாக வடியவும் இந்த ஸ்பாஞ்ச் பார்க்குகள் உதவும் என மழைநீர் சேகரிப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகின் பல நாடுகளில் இதுபோன்ற ஸ்பாஞ்ச் பார்க்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை பூங்கா அமைந்திருக்கும் இடம், சாலைகள் அமைப்பு, மண்ணின் தன்மைபோன்றவற்றை ஆராய்ந்து அதற்கேற்ப அமைக்கப்படுகின்றன. கட்டிடங்கள் நிறைந்த நகர்ப்புறங்களில் பெய்யும் மழை நீரை தேங்கவிடாமல் சேகரித்து, சுத்திகரிக்கும் தன்மை கொண்ட ஸ்பாஞ்ச் பார்க்குகள், குட்டை போன்ற அமைப்பையும், அகழியையும் கொண்டிருக்கும். அகழிகள் சாலையில் இருந்து நீரை எடுத்து சென்று, மழைநீர் வடிகால் வழியாக தண்ணீரை குட்டைக்கு கொண்டு சேர்க்கும்.
இந்த குட்டையை சுற்றி பாதுகாப்பு வேலியுடன் கற்சுவர் அமைக்கப்பட்டிருக்கும். மழைநீர் சேமிப்புக்கான கட்டமைப்பும் இதில் இடம்பெறுவதால், குட்டையை சுற்றி ஈரப்பதத்துடன் இருக்கும். அதன்மூலம் குட்டையை சுற்றி மரங்களை வளர்க்க ஏதுவாகவும் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த ஸ்பாஞ்ச் பார்க்குகளின் பயன்பாடு குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் உள்ள பூங்காக்களில் புதிதாக ‘ஸ்பாஞ்ச் பார்க்’ என்ற மழைநீர் சேமிப்பு தொட்டியுடன் கூடிய குட்டைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதுவரை ரூ.7.67 கோடி மதிப்பீட்டில் 57 இடங்களில் இந்த ஸ்பாஞ்ச் பார்க்குகள் அமைக்கப்பட்டுள்ளன.அந்த வகையில் சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்கா, வேப்பேரி மைலேடீஸ் பூங்கா, ஜெர்மையா பூங்கா, கொளத்தூர் வி.வி.நகர் பூங்கா, பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா, கொரட்டூர் பெரியார் நகர் பூங்கா, சூளைமேடு கில் நகர் பூங்கா, நந்தனம் டர்ன்ஸ் புல் பூங்கா, மாதம்பாக்கம் பிருந்தாவன் நகர் பூங்கா, மணப்பாக்கம் பெல் நகர் பூங்கா, திருவான்மியூர் திருவள்ளுவர் நகர் பூங்கா, தலைமை செயலக காலனியில் உள்ள சிறுவர் பூங்கா, தரமணி பாரதி நகர் பூங்காக்களில் இந்த ஸ்பாஞ்ச் பார்க்குகள் நிறுவப்பட்டுள்ளன.
இதுதவிர மணலி புதுநகர் பகுதிகளில் அமைந்துள்ள 7 பூங்காக்கள், மாத்தூர் எம்எம்டிஏ பூங்கா, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இவை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. வடசென்னையில் மட்டும் 21 பூங்காக்களில் ஸ்பாஞ்ச் பார்க்குகள் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்பாஞ்ச் பார்க்குகளால் மழைநீர் சேமிப்பு அதிகரிப்பதுடன், நிலத்தடி நீர்மட்டமும் உயரும். சென்னையில் இனி புதிதாக அமைக்கப்படும் அனைத்து பூங்காக்களிலும் இந்த வசதி தவறாமல் இடம்பெறும். இவற்றின் மூலம் நிலத்தடி நீர்சேகரிப்பு அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மாநகராட்சி சார்பில் பரவலாக அமைக்கப்பட்டு வரும் ஸ்பாஞ்ச் பார்க் திட்டத்தை வரவேற்று பொதுமக்கள் கூறியதாவது:
தொழுவூரை சேர்ந்த மோ.பெருமாள்: இந்த ஸ்பான்ச் பார்க்குகள் மழைக் காலங்களில் பெரிதும் பயன்படும். சென்னையில் இத்திட்டத்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்பு அதிகம். இத்துடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் அறிவிக்கப்பட்டிருந்த, வீட்டுக்கு வீடு மழைநீர் சேகரிப்பு திட்டத்தையும் கொண்டு வந்தால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து அனைவரும் உணர வேண்டும்.
கொரட்டூரை சேர்ந்த திருமால்: இது அருமையான திட்டம். இவற்றை பூங்காக்களில் மட்டும் செயல்படுத்தாமல், பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் போன்ற இடங்களிலும் அமைக்கவும் அரசு முன்வர வேண்டும். வெள்ளப்பெருக்கு காலங்களில் இவை நமக்கு பெரிதும் உதவும். முக்கியமாக மழைநேரங்களில் பூங்காக்களில் தண்ணீர் தேங்காது. இதனால் வாக்கிங் செல்ல எந்த பிரச்சினையும் இருக்காது என நம்பலாம். அதேநேரம் இவை சரியாக பயன்படுகிறதா, தொடர்ந்துபராமரிக்கப்படுகிறதா என்பதை மாநகராட்சி கண்காணிக்க வேண்டியது அவசியமாகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT