Published : 20 Sep 2023 07:23 AM
Last Updated : 20 Sep 2023 07:23 AM
சனாதனத்தைப் பற்றிப் பேசிய திமுகவின் நிறுவனர் அண்ணாவே 1956-ல் மதுரை தமிழ்ச் சங்க நிகழ்ச்சி மேடையில் தெரிவித்த கருத்துக்காக பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவரால் வெளிப்படையாக கண்டிக்கப்பட்டார், மன்னிப்பு கேட்ட பிறகே ஊர் திரும்ப முடிந்தது என்று அண்மையில் பாஜக-வின் தமிழக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டார்.
“இது ஆதாரமற்ற செய்தி, திராவிட இயக்கத்தை வளர்த்த முன்னோடியை வேண்டுமென்றே அவதூறாகப் பேசியிருக்கிறார் அண்ணாமலை, இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று அதிமுக தலைவர்கள் சொன்னதோடு... கடுமையான வார்த்தைகளால் அண்ணாமலையை விமர்சிக்க... பதிலுக்கு அண்ணாமலையும் வார்த்தைகளில் கடுமை காட்ட... இரு கட்சிகளின் கூட்டணியே தொடருமா என்ற நிலைக்கு வந்து நிற்கிறது.
“இந்தத் தகவல் ‘தி இந்து’ ஆங்கிலப் பத்திரிகையில் 1956 ஜூன் 1, 2, 3, 4 தேதிகளில் வெளியாகி இருக்கிறது, வேண்டுமென்றால் நூலகம் சென்று எடுத்துப் படியுங்கள், நான் உண்மைக்கு மாறாக எதையும் பேசவில்லை, அதற்கு அவசியமும் இல்லை’ என்று பதில் அளித்திருக்கிறார் அண்ணாமலை முதலில், மதுரை தமிழ்ச்சங்க நிகழ்ச்சி குறித்து ‘தி இந்து' ஆங்கில நாளிதழில் பிரசுரமான செய்தியிலிருந்து...
அண்ணா பேச்சு: மதுரை மீனாட்சி அம்மன் ஆலய மேல ஆடி வீதியில் நடந்த மாநாட்டு நிகழ்ச்சியில், சங்க காலத்துப் பாடலொன்றை ஒரு சிறுமி மிக அழகாகப் பாடினாள். அடுத்து பேச வந்த அண்ணாதுரை தனக்கே உரிய பாணியில், “இந்தச் சிறுமி சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் தமிழில் இயற்றப்பட்ட சங்கப் பாடலை மிக இனிமையாகப் பாடினாள்; இதைக்கூட பக்த சிரோன் மணிகள் உமையம்மையின் புனிதப் பாலை அருந்தியதால்தான் இச் சிறுமியால் இப்படிப் பாட முடிந்தது என்று கூறிவிடுவார்கள், நாம் இப்போது இப்படிப்பட்ட புரட்டுகளிலிருந்து மீண்டு உண்மை எது என்பதைப் பகுத்தறிந்து தேறும் நிலைக்கு வந்துவிட்டோம்” என்றார்.
வன்மையாகக் கண்டித்தார்: மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்திலேயே நடைபெறும் இந்த கூட்டத்தில் பேச வகுப்புவாத அமைப்புகளின் தலைவர்கள் சிலருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதை வன்மையாகக் கண்டித்தார் தேவர். மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் நடந்த இந்நிகழ்ச்சியில் நாத்திகக் கருத்துகளை திமுக தலைவர் சி.என்.அண்ணாதுரை முந்தைய நாள் பேசியதை அவர் சுட்டிக் காட்டினார்.
தொடக்க விழா நிகழ்ச்சியில், ‘ஆரியர்கள் - திராவிடர்கள்’ என்ற கூற்று தொடர்பாக சி. ராஜகோபாலாசாரி தெரிவித்த கருத்துகளை மாநாட்டில் மூன்று நாள்கள் தொடர்ந்து வெவ்வேறு பேச்சாளர்கள் விமர்சித்துப் பேசியது முறையற்றது என்றும் கண்டித்தார்.
பிறகு மேடையைவிட்டு இறங்கிச் சென்றுவிட்டார். அதன் பிறகு கூட்டம் எந்தவித தடங்கலும் இல்லாமல் நடந்தது. இவ்வாறு அந்தச் செய்தியில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT