Published : 20 Sep 2023 06:00 AM
Last Updated : 20 Sep 2023 06:00 AM
சென்னை: கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டை முன்னிட்டு, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த ஆடூரில் கடந்த 1924 செப்.29-ம் தேதி பிறந்தவர் கவிஞர் தமிழ்ஒளி. பாரதியாரின் வழித்தோன்றலாகவும், பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கி கவிதைகளை படைத்தவர். கதை, கட்டுரை, இலக்கிய திறனாய்வு, மேடை நாடகம், குழந்தை பாடல்களையும் எழுதியுள்ளார். அவரது பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு, நூற்றாண்டு விழா குழுவினர் முதல்வர் ஸ்டாலினிடம் பல்வேறு கோரிக்கைகளை விடுத்தனர்.
இதையடுத்து, முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டை முன்னிட்டு, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் வளர்ச்சிதுறை சார்பில் அவரது மார்பளவு சிலை அமைக்கப்படும்.
பள்ளி மாணவர்களின் தமிழ் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், வங்கியில் ரூ.50 லட்சம் வைப்புத் தொகையாக செலுத்தி, அதில் இருந்து கிடைக்கும் வட்டித் தொகையில் இருந்து ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சி துறை மூலம் தமிழ் சார்ந்த போட்டிகள் நடத்தி கவிஞர் தமிழ்ஒளி பெயரில் பரிசுகள் வழங்கப்படும்' என தெரிவித்துள்ளார்.
முதல்வரின் அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலசெயலாளர் முத்தரசன் ஆகியோர் பாராட்டி வரவேற்றுள்ளனர்.
கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு சார்பில், அதன் தலைவர் சிகரம் ச.செந்தில்நாதன், செயலாளர் இரா. தெ,முத்து, பொருளாளர் வே.மணி ஆகியோரும் முதல்வரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT