Published : 17 Dec 2017 05:38 PM
Last Updated : 17 Dec 2017 05:38 PM

அரசாங்க வேலையை நாங்கள் செய்தும் அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை: வேதனையில் கண்ணம்பாளையம் விவசாயிகள்

கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியத்துக்குள் வருவது கண்ணம்பாளையம். இந்தக் கிராமத்தின் வடக்கு எல்லையில், 66 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது இவ்வூர் குளம். நொய்யலில் வரும் வெள்ளம் ராஜ வாய்க்கால்கள் மூலம் கோவை நகரத்தின் பல்வேறு குளங்களை நிரப்பி விட்டு வெள்ளலூர் அணைக்கு வருகிறது. அங்கிருந்து பிரியும் மதகு மற்றும் ராஜவாய்க்கால் மூலம் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளபாளையம் குளத்திற்கும் வருகிறது.

இந்த குளம் நிரம்பி வழிந்து மறுபடி புறப்படும் ராஜ வாய்க்கால் 2 கிலோமீட்டர் பயணித்து கண்ணம்பாளையம் குளத்தை நிரப்புகிறது. வெள்ளலூர் அணையிலிருந்து வரும் இந்த ராஜ வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு மற்றும் புதர்மண்டிக் கிடந்ததால் 20 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளபாளையம் மற்றும் கண்ணம்பாளையம் குளத்திற்கு நீரே வராமல் இப்பகுதி விவசாயமே பாழ்பட்டது. பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கும், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் மனு அளித்தும் பயனில்லை.

எனவே மக்களே கண்ணம்பாளையம் குளம் கமிட்டி என்று ஒன்றை ஏற்படுத்தி குளத்தை தூர்வாரினர். சுமார் ஏழரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாய்க்காலை மறித்து நின்ற புதர்களையும் அகற்றினர். மழைக்காலங்களில் நொய்யலில் வரும் வெள்ளம் பள்ளபாளையம், கண்ணம்பாளையம் குளங்களுக்கு விடப்பட்டது. அவை நிரம்பின. கண்ணம்பாளையத்தை பொறுத்தவரை ஊர்ப்புறத்திலிருந்து 40 அடி தாழ்வான பகுதியில் அமைந்திருந்ததால், நிலத்தடி நீர் உயரவில்லை.

இதையடுத்து, குளத்துக்கு அருகில் கிணறு தோண்டி, 50 ஹெச்.பி. மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்து, ஒரு அடி விட்டமுள்ள குழாய்கள் மூலம் 1.5 கிலோமீட்டர் தொலைவு கொண்டு சென்று, 4 ஏக்கர் மற்றும் 16 ஏக்கர் பரப்பில் ஊருக்குள் உள்ள குட்டைகளில் தண்ணீரை நிரப்பினர். குட்டையில் நீர் காலியாகும்போது, மீண்டும் மோட்டார் மூலம் நீர் ஏற்றினர். இதன் மூலம் மழைக்காலங்களில் மட்டும் தண்ணீர் இருந்த ஊர் குட்டைகள் ஆண்டு முழுவதும் நிரம்பி காட்சியளிக்கிறது. வறண்டுகிடந்த 20 பஞ்சாயத்து கிணறுகள், 25 ஆழ்குழாய்க் கிணறுகள், 150 விவசாயக் கிணறுகளில் தண்ணீர் அதிகரித்தது. இந்த செலவினங்களுக்கு இந்த குளத்தில் மீன்பிடிக்கும் உரிமை குத்தகைக்கு விடப்பட்டு அதில் வரும் வருவாய் குளம் மற்றும் வாய்க்கால் சீரமைப்புக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் இங்கே 1000 ஏக்கர் விவசாயம் காப்பாற்றப்பட்டதோடு, குடிநீருக்கும் பஞ்சமில்லா நிலை இருந்து வந்தது.

இப்படி மக்களே எடுத்து செய்யும் குள மேம்பாட்டில் சமீபகாலமாக பெரிய சிக்கல். வெள்ளலூர் அணையிலிருந்து பிரியும் வாய்க்கால் மூலம் வரும் தண்ணீர் 4 மாதங்களுக்கு ஒரு முறை 30 நாட்களுக்கு பள்ளபாளையம், கண்ணம்பாளையம் குளங்களுக்கு விட உரிமை உள்ளது. அப்படி வரும்போது 15 நாள் பள்ளபாளையம் குளத்திற்கும், 15 நாள் கண்ணம்பாளையம் குளத்திற்கும் விடலாம். ஆனால் பள்ளபாளையம் குளத்தில் மதகு வசதி கிடையாது. அக்குளம் நிரம்பிய வழிந்த பின்புதான் கண்ணம்பாளையம் குளத்திற்கு செல்ல முடியும். அந்த இடத்தில் மதகு வைத்துத் தரச் சொல்லி நீண்ட காலமாக கண்ணம்பாளையம் மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள். அதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் முயற்சி எடுக்கவேயில்லை.

தவிர பள்ளபாளையம், ஒட்டர்பாளையம், இருகூர், ஆச்சாங்குளம், சூலூர், சின்னாண்டி பாளையம், சியாமளாபுரம் என வரும் குளங்களில் மீன்பிடிக்கும் டெண்டரை எடுத்துள்ளவர் கண்ணம்பாளையம் குளத்திற்கு தண்ணீர் வரும் வாய்க்கால்களை எல்லாம் வலை கட்டியும், குப்பைக்கூளங்களை போட்டும் அடைத்து விடுகிறார் என்ற குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து இருந்து வருகிறது. அதை அகற்ற போகும்போதெல்லாம் விவசாயிகள் பேரால், பட்டா பூமிக்காரர்கள் பேரால் சண்டையும் ஏற்படுகிறது.

இந்த ஆண்டு மழைக் காலத்தில் நிலைமை மிகவும் மோசமாகி கண்ணம்பாளையம் குளத்திற்கு வரவேண்டிய நீர் பாதிக்குளத்திற்கு வரவில்லை என்று புகார் தெரிவிக்கிறார்கள் கண்ணம்பாளையம் மக்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய கண்ணம்பாளையம் குளத்துக்கமிட்டி தலைவர் கே.என். சண்முகம், ''அரசாங்கம் செய்யும் வேலையை 18 வருஷமாக மக்கள் கமிட்டி மூலம் நாங்கள் செய்து வருகிறோம். அதிகாரிகள் ஒத்துழைக்க மறுக்கிறார்கள். வருஷந்தோறும் குளம் தூர்வாருவதற்கும், வாய்க்கால் சுத்தம் செய்வதற்கும் ஒதுக்கப்படும் நிதியை கூட இஷ்டம் போல் கணக்கெழுதிக் கொள்கிறார்கள்!'' என வேதனை தெரிவித்ததோடு, ஏழரை கிலோமீட்டர் தூரம் அடைபட்டுக் கிடக்கும் வாய்க்கால்களையும் நேரடியாக அழைத்துச் சென்று காண்பித்தார்.

பள்ளபாளையம் பேரூராட்சி அலுவலகத்தை ஒட்டிய வாய்க்காலில் ஒரே குப்பை மயம். அடுத்ததாக பள்ளபாளையம் குளத்தில் நிறையும் நீர் அங்குள்ள வாய்க்கால் தடையால் திரும்ப வழிந்து ஒரு பகுதி ஆற்றுக்கே சென்று கொண்டிருந்தது. இந்த குளத்திற்கு வரும் வாய்க்கால் பகுதியில் மீன்கள் தெறித்து ஓடிவிடாமல் இருப்பதற்காக இரும்பு வலை ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதில் ஆகாயத்தாமரை மற்றும் குப்பை நிறைந்து கிடந்தது. அடுத்ததாக வெள்ளலூர் அணைக்கு முன்பு மின்மயான சுடுகாடு அருகே நிறைய அடைப்புகள். இதனால் வாய்க்கால் தண்ணீர் திரும்ப ஆற்றுக்கே சென்று கொண்டிருந்தது. அணைக்கட்டு இருந்த இடமே தெரியவில்லை. அந்த அளவு புதர் மூடி மரங்கள் முளைத்து கிடந்தது. அங்கிருந்து பிரியும் மதகிலும் நீர் கசிந்து ஆற்றுக்கே பாதி சென்று வீணாகிக் கொண்டிருந்தது.

''இப்படி ஏழரை கிலோமீட்டர் தூர ராஜவாய்க்காலில் கண்ட இடங்களில் எல்லாம் அடைப்பாகவே இருந்தால் நாங்கள்தான் எத்தனை செய்ய முடியும்? இடையில் உள்ள பள்ளபாளையம், ஒட்டர்பாளையம், பட்டணம், வெள்ளலூர் மக்களும் எங்களுக்கு ஒத்துழைப்பதில்லை. குப்பையை நிறைத்தும், நீரைத்தடுத்தும் பாடாய்படுத்துகிறார்கள். இதை அதிகாரிகளே செப்பினிட்டு தரவேண்டும் என மக்களை திரட்டி போராட்டம் நடத்த உள்ளோம்!'' எனத் தெரிவித்தார் சண்முகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x