Last Updated : 19 Sep, 2023 09:01 PM

 

Published : 19 Sep 2023 09:01 PM
Last Updated : 19 Sep 2023 09:01 PM

மகளிர் உரிமை தொகை விசாரணைக்காக வங்கிகளில் ஒரே நேரத்தில் குவியும் பெண்கள்

மதுரை ஒத்தக்கடை இந்தியன் வங்கியில் பெண்கள் கூட்டம்

மதுரை: மகளிர் உரிமை தொகை விசாரணைக்காக பெண்கள் ஒரே நேரத்தில் குவிவதால் வழக்கமான பணிகள் பாதிக்கப்படுவதால் வங்கிகளில் தனி கவுன்டர் அல்லது தனி பணியாளர் நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் 1.06 கோடி பெண்களுக்கு செப்டம்பர் மாதத்திலிருந்து மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. செப். 15-ல் அனைவரின் வங்கி கணக்கிலும் பணம் வரவு வைக்கப்பட்டது. இத்திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் நிராகரிகக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தியும் சம்பந்தப்பட்டவர்களின் செல்போன் எண்ணிற்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வங்கி கணக்கில் மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தவர்களும், குறுஞ்செய்தி வராதவர்களும் வங்கிகளுக்கு படையெடுத்து வருகின்றனர். பெண்கள் மொத்தமாக வங்கிக்கு வருவதால் வங்கிகளில் கூட்டம் அலைமோதுகிறது.

மகளிர் உரிமை தொகை விசாரணைக்காக வருபவர்கள் முதலில் வங்கி கணக்கில் பணம் வந்துள்ளதா என்பதை உறுதி செய்கின்றனர். பின்னர் பணத்தை எடுக்கின்றனர். அடுத்து கணக்கு புத்தகத்தில் வரவு - செலவு விபரங்களை பதிவு செய்கின்றனர். ஆதார் கணக்கு இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் மட்டுமே உரிமைத் தொகை வரவு வைக்கப்படுகிறது. இதனால் ஆதார் கார்டு இணைக்கப்படாதவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதுள்ளது.

மகளிர் உரிமைத் தொகை விசாரணைக்கு வருவோரின் கூட்டம் அதிகளவில் இருப்பதால் வங்கிகளுக்கு வழக்கமான பணிக்கு வருபவர்கள் பாதிக்கப்படுகின்றனர். வங்கி ஊழியர்களின் காசோலை வழங்குவது, நகை எடுத்தல், சரிபார்த்தல், நகை கடன் மற்றும் மின்னணு பரிவர்த்தனை பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிகளில் மகளிர் உரிமைத் தொகை விசாரணைக்காக வருவோருக்காக தனி இடம் ஒதுக்கி தனி பணியாளரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து மங்களகுடியைச் சேர்ந்த ஆண்டிச்சாமி கூறுகையில், “வங்கிகளுக்கு சேமிப்பு கணக்கில் பணம் செலுத்தவும், நகை கடன் கணக்கில் பணம் செலுத்தவும், டாஸ்மாக் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் முதல் நாள் வசூல் பணத்தை செலுத்துவதற்காக ஏராளமானோர் தினமும் வங்கிக்கு வருகின்றனர்.

மகளிர் உரிமைத் தொகை தொடர்பான விசாரணைக்காக ஒரே நேரத்தில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் வங்கியில் குவிகின்றனர். இதனால் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. வழக்கமான பண பரிவர்த்தனை பணிகளுக்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டியதுள்ளது. எனவே மகளிர் உரிமை தொகை தொடர்பான விசாரணைகளுக்காக மட்டும் ஒவ்வொரு வங்கிகளிலும் தனி கவுன்டர் அல்லது தனி பணியாளர் நியமிக்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x