Last Updated : 19 Sep, 2023 08:44 PM

 

Published : 19 Sep 2023 08:44 PM
Last Updated : 19 Sep 2023 08:44 PM

“அண்ணா பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதி உள்ளதா?” - எஸ்.பி.வேலுமணி ஆவேசம்

படம்: ஜெ.மனோகரன்

கோவை: “அண்ணா குறித்த உண்மைக்குப் புறம்பான விமர்சனங்களை அண்ணாமலை தவிர்த்திருக்க வேண்டும்” என அதிமுக கூட்டத்தில் அக்கட்சியின் கொறடா எஸ்.பி.வேலுமணி பேசினார்.

கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில், பூத் கமிட்டி செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (செப் 19) நடந்தது. இக்கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தலைமை வகித்து பேசியது: “பேரறிஞர் அண்ணா ஏழைகளுக்காக திமுகவை தொடங்கினார். இன்று திமுக குடும்பச் சொத்தாக மாறிவிட்டது. நேற்று நடந்த நிகழ்ச்சி தொடர்பாக ட்விட்டரிலும், முகநூலிலும் திமுகவினரும், பாஜகவில் ஒரு குழுவினரும் பதிவு போடுகின்றனர். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு எங்களுக்கு ஒரே தலைவர் கழக பொதுச்செயலாளர் பழனிசாமிதான். அவர் சொல்வதுதான் எங்களது கருத்து.

பாஜக குறித்து வேலுமணி பேசவில்லை, தங்கமணி பேசவில்லை என கிளப்பிவிடுகின்றனர். யார் கூட்டணியில் இருந்தாலும் எங்களது தன்மானத்தை விட்டுத் தர மாட்டோம். ஒரு கூட்டணியில் இருந்து கொண்டு, என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என பேசுபவரை எப்படி தலைவராக ஏற்றுக்கொள்ள முடியும். பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு கருத்து தெரிவித்துள்ளார். கூட்டணியில் இருந்துகொண்டு அந்தக் கருத்தை அவர் கூறியிருக்கக் கூடாது. ஜெயலலிதாவை பற்றி பேசும் தகுதி அவருக்கும், வேறு யாருக்கும் கிடையாது. தற்போது அண்ணாவை பற்றி பேசியுள்ளார். அதை பற்றி பேச வேண்டிய அவசியமே கிடையாது. அண்ணாவை பற்றி பேசக்கூடிய தகுதி அவருக்கு உள்ளதா?. அண்ணாமலை பேசும்போது, அண்ணா குறித்த உண்மைக்கு புறம்பான விமர்சனங்களை தவிர்த்து இருக்க வேண்டும்.

உண்மைக்கு புறம்பாக வரலாற்றை திரித்து பேசுவது ஒரு தலைவருக்கு அழகு கிடையாது. அன்று நடந்தது என்ன வென்றால், பசும்பொன் முத்துராமலிங்க தேவர், ஆலய வளாகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் சமயம் சார்ந்த கருத்துகளை பதிவு செய்வது சரியல்ல என்பதை மட்டுமே தெரிவித்தார். அந்த விழாவுக்கு தலைமை தாங்கியவர் பி.டி.ஆர். பேச்சாளர்கள் எதை பேச வேண்டும் என்பதை கட்டுப்படுத்துவது சாத்தியமில்லாத ஒன்று என தனது கருத்தை பி.டி.ஆர் கூறியுள்ளார்.

அப்படியெனில் இந்தக் கூட்டத்தை மதுரை தமுக்கம் மைதானத்தில் மாற்றிக் கொள்ளலாம் என வேண்டுகோள் வைத்தார் பசும்பொன் முத்துராமலிங்கதேவர். அவரது வேண்டுகோளுக்கு இனங்க இக்கூட்டம் தமுக்கம் மைதானத்தில் நடந்தது. இது தான் உண்மை. இதில் அண்ணாவும், பி.டி.ஆரும் மன்னிப்பு கேட்வில்லை. வருத்தமும் தெரிவிக்கவில்லை என்பதுதான் உண்மை. அண்ணா குறித்த உண்மைக்கு புறம்பான விமர்சனங்களை முன்வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தேர்தலுக்காக எங்கள் கொள்கையை விட்டுக்கொடுப்பது கிடையாது” என்று அவர் பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “மக்களவைத் தேர்தலில் பழனிசாமி தலைமையில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம். பாஜக விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெளிவாக கூறிவிட்டார். தந்தை பெரியார், அண்ணா, ஜெயலலிதா உள்ளிட்டோர் நாடு சிறப்பாக இருக்க தமிழகத்துக்காக உழைத்து பல சீர்திருத்தங்களை கொண்டு வந்த தலைவர்கள்.

அவர்கள் குறித்து தேவையில்லாமல் பேசியிருக்கக் கூடாது என்பது தான் எங்கள் கருத்து. இக்கருத்துக்கு திமுக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், எங்கள் பொதுச்செயலாளர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எங்களுக்கு கொள்கை தான் முக்கியம். தந்தை பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா கொள்கைகளையும், திராவிட கொள்கைகளை பாதுகாத்து வருபவர் பழனிசாமி மட்டும்தான். எங்கள் தலைவர்களை பற்றி யார் பேசினாலும் பேசுவோம்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x