Last Updated : 19 Sep, 2023 02:32 PM

 

Published : 19 Sep 2023 02:32 PM
Last Updated : 19 Sep 2023 02:32 PM

“பாஜகவுடன் கூட்டணி இல்லை; என்.ஆர்.காங். கூட்டணி தொடரும்” - புதுச்சேரி அதிமுக அறிவிப்பு

அன்பழகன் | கோப்புப் படம்

புதுச்சேரி: “பாஜகவுடன் கூட்டணி இல்லை. என்.ஆர்.காங்கிஸுடன் கூட்டணி தொடரும்” என்று புதுச்சேரி அதிமுக மாநிலச் செயலர் அன்பழகன் கூறியுள்ளார்.

புதுச்சேரி அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: "தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது தகுதி, வயதை, அனுபவம் எதையும் புரிந்துகொள்ளாமல் பேசி வருகிறார். அதிமுக கூட்டணி கட்சி என நினைக்காமல் கட்சியின் தலைவர்களை தொடர்ந்து விமர்சனம் செய்வதை புதுச்சேரி மாநில அதிமுக கண்டிக்கிறது. மலிவு விளம்பரத்துக்காக பெரியார், அண்ணா, ஜெயலலிதா ஆகியோரைப் பற்றி அண்ணாமலை அவ்வப்போது விமர்சனம் செய்கிறார். இது இந்திய நாட்டின் பிரதமராக மோடி வரக் கூடாது என்ற அண்ணமாலையின் சதி செயலாக உள்ளது.

தேசிய கட்சியின் மாநிலத் தலைவராகச் செயல்படக் கூடிய தகுதி அண்ணாமலைக்கு இல்லை. அவர் மீது கட்சி உரிய நடவடிக்கை எடுக்காததால் தொடர்ந்து இவ்வாறு பேசி வருகிறார். அண்ணாமலை புதுவைக்கு வரும்போது அதிமுக பதிலடி தரும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமையும் கூட்டணி புதுவை உட்பட 40 தொகுதியிலும் வெற்றி பெறும்.

அதிமுகவுடன் கூட்டணி இல்லாவிட்டால் தென்னிந்தியாவிலேயே பாஜக என்ற ஒரு கட்சி இடம் தெரியாமல் போயிருக்கும். கர்நாடகத்தில் இருந்த பாஜக தனது ஆட்சியை தேர்தல் பொறுப்பாளர் அண்ணாமலையால்தான் இழந்தது என்பதை பாஜக தலைவர்கள் உணர வேண்டும். அண்ணாமலையை ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் கட்டுப்படுத்த வேண்டும்.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர் ரங்கசாமி தலைமையில் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்டோம். பாஜகவால் தான் புதுச்சேரியில் அதிமுக தோல்வியடைந்தது. என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் பாஜகவை சேர்ந்தவர்கள் அமைச்சர்களாகவும், பேரவைத் தலைவராகவும், எம்எல்ஏவாகவும் இருக்க அதிமுக தொண்டர்களின் வாக்குதான் காரணம் என்பதை பாஜக மறந்து விடக்கூடாது. தமிழகத்தில் அதிமுகவின் நிலைப்பாடு புதுவைக்கும் பொருந்தும். புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு முதல்வர் ரங்கசாமி தலைமையேற்றுள்ளார்.

எங்களை பொறுத்தவரை என்.ஆர்.காங்கிரஸுடன் எங்கள் கூட்டணி தொடரும். கூட்டணி குறித்து எடப்பாடியார் முடிவின்படி புதுச்சேரி அதிமுக செயல்படும். எங்கள் தலைமை பாஜகவுடன் கூட்டணி இல்லையென்று அறிவித்துள்ளது. அது மிக்க சந்தோஷமான செய்தியாகும். அதிமுக தொண்டர்கள் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சியாக உள்ளனர்" என்று அன்பழகன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x