Published : 18 Sep 2023 06:30 PM
Last Updated : 18 Sep 2023 06:30 PM
புதுடெல்லி: `பிளாஸ்டர் ஆப் பாரிஸ்' சிலைகளை விற்க அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, உயர் நீதிமன்ற மதுரை கிளையின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
ராஜஸ்தானைச் சேர்ந்த பிரகாஷ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: போலீஸாரும், வருவாய் அதிகாரிகளும் விநாயகர் சிலைகளை விற்கக் கூடாது என உத்தரவிட்டு எனது கடைக்கு சீல் வைத்தனர். நான் தயாரித்துள்ள சிலைகளால் நீர் நிலைகளில் மாசு ஏற்படாது. இதுகுறித்து போதுமான விளக்கம் அளித்தும் சிலைகளை விற்க அனுமதிக்கவில்லை என கூறியிருந்தார்.
இம்மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் அனுமதிக்கப்பட்ட அளவில் `பிளாஸ்டர் ஆப் பாரிஸ்' பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார். இச்சிலைகளை வாங்குவோர் வீடுகள், கோயில்கள், திருமண மண்டபங்களில் வைக்கலாம். ஆனால், நீர் நிலைகளில் கரைக்க அனுமதிக்க முடியாது. அதேநேரத்தில் `பிளாஸ்டர் ஆப் பாரிஸ்' சிலைகள் விற்பனையை அதிகாரிகள் தடுக்க முடியாது. மனுதாரர் சிலைகள் வாங்குவோரின் விவரங்களை பதிவிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி நெல்லை மாவட்ட ஆட்சியர், உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்தார். அதில், மத்திய மாசு கட்டுப்பட்டு வாரியம் களிமண்ணால் மட்டுமே சிலைகளை செய்திருக்க வேண்டும். `பிளாஸ்டர் ஆப் பாரிஸ்' பயன்படுத்தி தயாரிக்க அனுமதி இல்லை எனத் தெளிவாக குறிப்பிட்டுள்ளது என கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி. பரத சக்கரவர்த்தி அமர்வு விடுமுறை நாளான நேற்று அவசர வழக்காக விசாரித்தது. அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா. கதிரவன் ஆஜரானார்.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தான் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதிமுறைகளை வகுத்துள்ளது. அதை ஏன் பின்பற்றவில்லை. விஷம் என்பதில் ஒரு துளி விஷம், அதிக விஷம் என்பது இல்லை. எல்லாமே விஷம்தான். அமோனியம் மெர்குரி போன்று `பிளாஸ்டர் ஆப் பாரிஸ்' நச்சுப் பொருள்தான். `பிளாஸ்டர் ஆப் பாரிஸ்' சிலைகளை விற்க அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை எதிர்த்து பிரகாஷ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு அவசர வழக்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், அனுமதிக்கப்பட்ட அளவில்தான் விநாயகர் சிலைகள் தயாரிப்பில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மூலப்பொருட்களால் செய்யப்பட்ட சிலைகளின் விற்பனைக்கும், கரைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், பெரும் பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடும் என்று வாதிடப்பட்டது.
அப்போது தமிழக அரசுத் தரப்பில், எந்த வகையிலும் தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டிருந்தாலும், அந்த விநாயகர் சிலைகள் அனுமதிக்கப்படாது. இதுதான் விதிமுறையாக இருந்து வருகிறது. சிலைகள் செய்வதற்கான உரிய அனுமதியை மனுதாரர் பெற்றிருக்கவில்லை. மேலும், எந்த பொருட்களைக் கொண்டு விநாயகர் சிலைகள் செய்ய வேண்டும் என்பது தொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருக்கிறது. அதை பின்பற்றி தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்குத்தான் விற்பனை செய்யவும், நீர்நிலைகளில் கரைக்கவும் அனுமதி வழங்கப்படுகிறது" என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கில், உயர் நீதிமன்ற மதுரை கிளை இரு நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில் தலையிட முடியாது. பொது நீர் நிலைகளில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சிலைகளை கரைக்கக்கூடாது என்பது சரியானதுதான் என்று உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT