Published : 18 Sep 2023 11:59 AM
Last Updated : 18 Sep 2023 11:59 AM
சென்னை: சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டு விபத்தில் சிக்கிய பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது, மனித உயிருக்கு ஆபத்து உண்டாக்குவது, பிறருடைய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பது என இரு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் காஞ்சிபுரம் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாலுசெட்டி சாத்திரம் அருகே பைக்கில் சென்றபோது சாகசம் செய்ய முயன்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
பைக் சாகசத்தில் ஈடுபட முயன்ற அவரது கை எலும்பு முறிந்துள்ளது. அது தவிர உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான ஒரு வீடியோவும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மருத்துவமனையில் அளிக்கப்பட்டு பின்னர், அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாலுசெட்டி சாத்திரம் காவல் துறையினர், டிடிஎஃப் வாசன் மீது, மனித உயிருக்கு ஆபத்து உண்டாக்குவது, பிறருடைய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பது என இரு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
யூடியூபில் பிரபல டிராவல் பிளாகராக வலம் வரும் கோவையைச் சேர்ந்த டிடிஎஃப் வாசனுக்கு லட்சக்கணக்கான சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர். இவரது ஃபாலோயர்களில் பெரும்பாலானோர் இளம் தலைமுறையினர். கடந்த ஆண்டு இவர் தனது பிறந்தநாளை ஒட்டி, தன்னைப் பின்தொடர்வோருடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தார். இந்த மீட்டப்பில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் போலீஸ் எச்சரிக்கும் அளவுக்கு அது சென்றது. அவரது அழைப்பை ஏற்று வந்த ஆயிரக்கணக்கானோரில் பலரும் 20 வயதுக்கு உட்பட்டவர்கள். இவரது இந்த ‘மாஸ்’ சந்திப்பு குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்களாகவும் எழுந்தன.
அவ்வப்போது இவர் சாலையில் பயணம் செய்து சர்ச்சையில் சிக்குவார். போலீஸார் அவர் மீது வழக்கு தொடர்ந்து, எச்சரித்து அனுப்புவது வழக்கம். கடந்த ஜூன் மாதம் அவரது பிறந்தநாள் அன்று அவர் நடிக்கும் ‘மஞ்சள் வீரன்’ படத்தின் அறிவிப்பு வெளியாகி இருந்தது. மணிக்கு 299 கி.மீ வேகத்தில் படப்பிடிப்பு என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT