Published : 18 Sep 2023 06:01 AM
Last Updated : 18 Sep 2023 06:01 AM
சென்னை: பெரியாரின் 145-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
பெரியாரின் 145-வது பிறந்த தினம் ‘சமூக நீதி நாளாக’ நேற்றுகொண்டாடப்பட்டது. இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், “பெரியார் வாழ்வே ஓர் அரசியல்தத்துவம். மொழி, நாடு, மதம்போன்றவற்றைக் கடந்து, மனிதநேயத்தையும் சுயமரியாதையை யும் அடிப்படையாகக் கொண்ட அரசியலை வலியுறுத்திய மாபெரும் சீர்திருத்தவாதி அவர்.
தாம் எண்ணியவை எல்லாம் சட்டவடிவம் பெறுவதை பார்த்துவிட்டே மறைந்த பெருமை அவருக்கே உரித்தானது. பெண் விடுதலைக்காகவும், சமத்துவ சமுதாயத்துக்காகவும், நாம் இன்று செயல்படுத்தும் திட்டங்களுக்கெல்லாம் அடிப்படை பெரியார் இயலே. அண்ணா, கருணாநிதிஆகியோரின் ஆட்சியைப்போல, எனது ஆட்சியும் பெரியாருக்கே காணிக்கை” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வேலூர் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள பெரியாரின்சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, கே.ஆர்.பெரியகருப்பன், ஆர்.காந்தி மற்றும் எம்.பி. எம்எல்ஏ-க்கள் உடனிருந்தனர். தொடர்ந்து, வேலூரில் மாவட்ட திமுக சார்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூகநீதிநாள் உறுதிமொழி ஏற்கப் பட்டது.
தமிழக அரசு சார்பில், சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்துக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, என்.கயல்விழி செல்வராஜ், சென்னை மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், எம்எல்ஏக்கள் தாயகம் கவி, த.வேலு, செய்தித்துறை இயக்குநர் த.மோகன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
அதிமுக சார்பில், கட்சியின்பொதுச் செயலாளர் பழனிசாமி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் அமைச்சர் செ.செம்மலை உள்ளிட்டோர் உடனிருந்தனர். சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில், முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், டி.ஜெயக்குமார், கோகுல இந்திரா மற்றும் அதிமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதேபோல, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பெரியார்படத்துக்கு மரியாதை செலுத்தினார். புகழேந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன், விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் பெரியார் சிலைக்கு மரி யாதை செலுத்தினார்.
பெரியாரின் பிறந்தநாளையொட்டி திக தலைவர் கி.வீரமணி,வெளியிட்டுள்ள அறிக்கையில், “தந்தை பெரியார் உலகமயமாகிறார். உலகம் பெரியார் மயமாகிறது. பெரியார் பிறந்த நாளில், புதிய சமூக நீதி தழைத்தோங்கும் சமூகம் படைக்க உறுதியேற்போம்” என்று தெரிவித்துள்ளார்.
மநீம தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பிறப்பினால் மனிதர்களில் பேதம்கற்பிப்பது பேரிழிவு என்பதை இறுதிவரை பிரச்சாரம் செய்து வந்தவர்பெரியார். கதரை அணிந்தது, கள்ளை எதிர்த்தது, பெண்ணுயர்வு போற்றியது என சகல பரப்புகளிலும் சமர் புரிந்தவர். சமத்துவத்தை சுவாசமாகக் கொண்டு வாழ்ந்த பெரியாரின் பிறந்த நாளில் அவர்தம் சொற்களை நினைவுகூர்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT