Published : 23 Jul 2014 10:41 AM
Last Updated : 23 Jul 2014 10:41 AM
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை - அது ஒரு மிகப்பெரிய மருத்துவக் கடல். வெளி நோயாளிகள், உள் நோயாளிகள் என எப்போதும் ஜனத் திரளாய் இருக்கும் இந்த மருத்துவமனையில் யார் எங்கே அட்மிட் ஆகி இருக்கிறார்கள் என்று கண்டுபிடிப்பதே பெரிய காரியம். அதுவும் கிராமத்து மக்கள் மருந்து, ரத்தம் தேவை என அலைவதை பார்க்கவே பரிதாபமாக இருக்கும். இவர்களுக்கு எல்லாம் வழிகாட்டும் கலங்கரை விளக்கமாய் நிற்கிறார்கள் பிரசன்னாவும் அஜ்மல் ஹுசைனும்.
பிரசன்னா டெலி மார்க்கெட்டிங் கில் டெலிவரி பிரதிநிதி, அஜ்மல் ஹுசைன் வெப் டிசைனர். காலை ஒன்பது மணிக்கெல்லாம் இந்த இரு இளைஞர்களையும் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் பார்க்கலாம். உதவிக்கு ஆள் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் உள் நோயாளிகளுக்குத் தேவையான சிறு சிறு உதவிகளை செய்து கொடுப்பது. இயலாதவர்களின் அறுவைச் சிகிச்சைகளுக்கு தேவையான ரத்தத்தை டோனர்களிடமிருந்து பெற்றுக் கொடுப்பது இவைதான் இவர்களின் முக்கியப் பணி. மதியம் 2 மணி வரை மருத்துவமனையில் சேவையாற்றிவிட்டு அதன் பிறகுதான் தங்களது பிழைப்பைப் பார்க்கப் போகிறார்கள். போன பிறகும் யாருக்காவது அவசர உதவி தேவையெனில் இவர்களில் யாராவது ஒருவர் பறந்தோடி வந்துவிடுவார்கள். தங்களது சேவை குறித்து நமக்கு விளக்கினார் அஜ்மல் ஹுசைன்.
“எனக்கு முந்தி பிரசன்னா மட்டும்தான் ஜி.ஹெச்-சுக்குள்ள போயி அங்கிருக்கிற நோயாளிகளுக்குத் தேவையான உதவிகளை செஞ்சு குடுத்துட்டு இருந்தார். ஒருநாள், அவருக்கு துணையாக நான் போனேன். அங்க இருந்த நிலைமைகளை பார்த்துவிட்டு அன்றிலிருந்து நானும் இந்த சேவையில இறங்கிட்டேன். தினமும் காலையில் போனதும் அனைத்து வார்டுகளிலும் இருக்கும் நோயாளி களை போய் பார்ப்போம். குறிப்பாக, உதவிக்கு ஆள் இல்லாமல் தனியாக வந்து அட்மிட் ஆகி இருக்கும் அப்பாவி ஜீவன்களுக்குத்தான் நாங்கள் முன்னுரிமை கொடுப்போம்.
போதிய அளவு ரத்தம் கிடைக்காததால் மதுரை ஜி.ஹெச்-சில் பல பேருக்கு அதிகபட்சம் மூணு மாசம் வரைக்கும் கூட ஆபரேஷன்கள் தள்ளிப் போயிருக்கு. இதைப் புரிந்து கொண்டு, சில புரோக்கர்கள் ஒரு யூனிட் ரத்தம் 1500 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்வார்கள். அதைக் கொடுத்து ரத்தம் வாங்கமுடியாத மக்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்களுக்காக நாங்களே டோனர்களை தேடிப் பிடித்துக் கொண்டுவந்து ரத்தம் கொடுக்க வைக்கிறோம்.
நோயாளிகளுக்குத் தேவையான உதவிகளை செய்துவிட்டு எங்களது மொபைல் எண்ணையும் அவர்களிடம் கொடுத்துவிட்டு வந்துவிடுவோம். ஏதாவது அவசர உதவி தேவையெனில் அவர்கள் எங்களை போனில் அழைப்பார்கள். யாராவது ஒருவர் ஓடிப்போய் அவர்களுக்குத் தேவையானதை செய்து கொடுப்போம்.
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு என்ன மாதிரி எல்லாம் பிரச்சினைகள் வருகின்றன, அவர்களுக்கு உதவி செய்ய எங்களைப் போன்ற ஆட்கள் இருந்தால் அது எந்த அளவுக்கு பிரயோஜனமாக இருக்கும் என்பது குறித்து இப்போது நாங்கள் ஒரு சர்வே எடுத்துக் கொண்டிருக்கிறோம். அது முடிந்ததும் இன்னும் சில நல்ல நண்பர்களை துணைக்கு சேர்த்துக் கொண்டு முழுவீச்சில் மதுரை ஜி.ஹெச்-சுக்குள் இயலாத நோயாளிகளுக்குத் தேவையான உணவு மற்றும் அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்கப் போகிறோம்.
அதற்கு முன்பாக கல்லூரி மாணவர்களை வாரம் ஒருமுறை இங்கே கூட்டி வந்து, இங்குள்ள நோயாளிகள் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு நம்மால் எப்படி உதவி செய்யமுடியும் என்பதை அவர்கள் உணரும்படி செய்யப் போகிறோம். சில சமயம் காலையில் வீட்டிலிருந்து ஜி.ஹெச்-சுக்குக் கிளம்புவதற்கு லேட்டாகிவிட்டால், ‘ஏம்பா இன்னும் நீ கிளம்பலையா?’ என்பார் அப்பா. இரவு வீடு திரும்பும்போது, ‘தம்பி.. இன்னைக்கி எத்தன பேருக்கு ரத்த தானம் வாங்கிக் குடுத்தே?’ என்பார் அம்மா. ‘உன்னிடம் உதவி கேட்பவர்களிடம் நீ ஒரு கூல்டிரிங்க்ஸ் கூட வாங்கிக் குடிக்கக் கூடாதுப்பா’ என்று இருவருமே சொல்வார்கள். எல்லா பெற்றோரும் இப்படி இருந்துவிட்டால் சேவை செய்யும் இளைஞர்களுக்கு பஞ்சமே இருக்காது’’ அழகாய் சொன்னார் அஜ்மல். (தொடர்புக்கு: 9500001402).
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT