Last Updated : 17 Sep, 2023 08:13 PM

1  

Published : 17 Sep 2023 08:13 PM
Last Updated : 17 Sep 2023 08:13 PM

ஹிட்லர் போன்ற சர்வாதிகார ஆட்சியை பிரதமர் மோடி நடத்துகிறார்: நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி: ஹிட்லர் போன்ற பயங்கரமான சர்வாதிகார ஆட்சியை மத்தியில் நரேந்திரமோடி நடத்துகிறார் என்று நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

பிரதமர் மோடி பிறந்த நாளை வேலையின்மை தினமாக புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் கடைபிடித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திராகாந்தி சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் துணைத் தலைவர் தேவதாஸ், பொதுச் செயலாளர் திருமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பாஜக அரசு கூறியது போல கோடி பேருக்கு வேலை தரவில்லை. நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. ஆசிரியர்கள்கூட ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுகிறார்கள் என்பதை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. மேலும் இளைஞர்கள் டீ, பக்கோடா, சமோசா விற்று நூதனமுறையில் எதிர்ப்பை தெரிவித்தனர்.

அப்போது முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: ''நாடாளுமன்றத் தேர்தலின்போது, நாட்டு மக்கள் வாக்களித்து நாங்கள் வெற்றிபெற்றால் மத்திய அரசின் நிறுவனங்கள், அதை சார்ந்த நிறுவனங்களில் ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை தருவோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஆனால் அவர் கூறியபடி தரவில்லை. மோடியின் ஆட்சியில் மக்களுக்கு பேச்சுரிமை, எழுத்துரிமை இல்லை. மக்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஹிட்லர் போன்ற பயங்கரமான சர்வாதிகார ஆட்சியை மத்தியில் நரேந்திரமோடி நடத்திக் கொண்டிருக்கிறார்.

புதுச்சேரிக்கு மோடி வந்தபோது ஊழல் இல்லாத ஆட்சியை கொடுப்பேன், பெஸ்ட் புதுச்சேரியாக ஆக்குவேன் என்றார். பெஸ்ட் புதுச்சேரியாக இல்லை ஒர்ஸ்ட் புதுச்சேரியாக மாறிவிட்டது. மதுக்கடைகள் திறப்பால் மக்களுக்கு அமைதி இல்லை. கல்வியின் தரம் குறைந்துவிட்டது. வியாபாரம் படுத்துவிட்டது. சுற்றுலாவை வளர்ப்பதாகக் கூறி கஞ்சா, அபீன், பிரவுன்சுகர் உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் 2024 நாடாளுமன்ற தேர்தலில், நமது வேட்பாளர் அமோக வெற்றி பெற்று ராகுல் காந்தி நாட்டின் பிரதமராக வர, இங்கிருந்து சென்று அங்கு கை தூக்க வேண்டும். அதற்கு அனைவரும் அயராது உழைக்க வேண்டும்.'' இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது: ''புதிய சட்டப்பேரவைக்கு நிலம் கையகப்படுத்தியது தொடர்பான கோப்புகளை சிபிஐக்கு அனுப்புவதாக பேரவைத் தலைவர் செல்வம் கூறியிருக்கிறார். வைத்திலிங்கம் முதல்வராக இருந்தபோது நிலத்தை கையகப்படுத்தியதாகவும், அந்த நிலத்தை விட்டுவிட்டதாகவும், அந்த கையகப்படுத்திய கோப்பு அவரிடம் வந்தபோது அந்த கோப்பை காலதாமதப்படுத்தியதாகவும், அதில் ஊழல் நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு கூறியிருக்கிறார். அவர் சொன்ன இடங்கள் வேறு, ரங்கசாமி கையப்படுத்திய இடங்கள் வேறு. சட்டப்பேரவைத் தலைவர் விவரம் தெரியாமல் பேசுகிறார். முதலில் கையகப்படுத்திய இடம், இப்போது ரங்கசாமி கையகப்படுத்தியுள்ள இடத்துக்கு பக்கத்தில் உள்ளது. முதல்வர் ரங்கசாமி 2012-ல் நிர்பந்தம், காழ்ப்புணர்ச்சி காரணமாக ஒரு இடத்தை கையகப்படுத்தினார். அதற்கு ரூ.18 லட்சம் அரசு டெபாசிட் கட்டியது.

அந்த நிலத்தை எடுக்க 2016 வரை அரசு பணம் செலுத்தவில்லை. அதனால் வருவாய்த்துறையினர் ரங்கசாமி முதல்வராக இருக்கும்போதே அந்த இடத்தை கையகப்படுத்துவதை கைவிட்டுவிட்டனர். ஆகவே ரங்கசாமி கையகப்படுத்திய இடமும், குற்றச்சாட்டு கூறப்படும் இடமும் தனித்தனி இடங்கள். முதல்வர் ரங்கசாமி கையப்படுத்திய இடத்தை நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக திரும்ப உரியவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டது. அது சம்மந்தமாக விசாரணை வைக்க அவர் தயாரா? வைத்திலிங்கம் காலக்கட்டத்தில் நடந்த சம்பவத்துக்கு விசாரணை வைக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

ஆனால் ரங்கசாமி கையகப்படுத்திய இடம் பக்கத்தில் உள்ளது. அந்த கோப்பையும் அவர் அனுப்பட்டும். ரங்கசாமி கையகப்படுத்திவிட்டு ஏன் 4 ஆண்டுகளாக அந்த கோப்பை வைத்திருந்தார். நாம் ஒன்று கேட்டால் அதற்கு பதில் சொல்லாமல், மற்றொரு பிரச்சினையை பேரவைத் தலைவர் பேசுகிறார். இதில் எந்தவித ஊழலுக்கும் இடமில்லை. நீதிமன்ற தீர்ப்பதைத்தான் நாங்கள் நடைமுறைப்படுத்தினோம். நிலம் கையகப்படுத்தியதற்கும், வைத்திலிங்கத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. பக்கத்து இடத்துக்கு விசாரணை வைத்தால் முதல்வர் ரங்கசாமிதான் முதலில் சிக்குவார். ஆகவே சிபிஐ விசாரணைக்கு நாங்கள் முழுமையாக தயாராக இருக்கிறோம்.'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x