Published : 17 Sep 2023 06:21 PM
Last Updated : 17 Sep 2023 06:21 PM
கோவை: வசூல் செய்து யாரெல்லாம் அமைச்சர்களாக இருந்தார்களோ, அவர்களுக்கு நேர்மை என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பதே தெரியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் 75 ஜோடிகளுக்கு சீர்வரிசையுடன், தமிழ் முறைப்படி சிவனடியார்கள் முன்னிலையில் இன்று (செப்.17) திருமணம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு மணமக்களை அண்ணாமலை வாழ்த்திப் பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தவரிடம், "அண்ணாமலையின் நடைபயணம் என்பது வசூல் பயணம். அதிமுக துணையில்லாமல் பாஜக வெற்றிபெற முடியாது" என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அண்ணாமலை, "இதற்கு முன்பு தமிழகத்தில் யாரெல்லாம் அமைச்சர்களாக இருந்து வசூல் செய்து பழக்கப்பட்டுள்ளார்களோ, அவர்கள் அனைத்தையும் வசூலாக பார்க்கிறார்கள். அவருக்கு வசூல் செய்துதான் பழக்கம். அவர்களெல்லாம் அமைச்சர்களாக இருந்ததே வசூலுக்காகதான். அதனால் நானும் நடைப்பயணம் சென்றால் அது வசூலுக்கு என நினைத்து கொள்கிறார்கள். வசூல் செய்து யாரெல்லாம் அமைச்சர்களாக இருந்தார்களோ, அவர்களுக்கு நேர்மை என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பதே தெரியாது. தூற்றுபவர்கள் தூற்றட்டும். பாஜக வளர்ச்சியை பார்த்து பொறாமை பட்டு பேசுகிறார்கள். இன்னும் அவர் பகுதிக்கு பாஜக நடைபயணம் போகவில்லை. போகும்போது பாருங்கள்.
சி.வி.சண்முகம் மாலை 6 மணிக்கு முன்பும், பின்பும் ஒரு மாதிரி பேசுவார். அவர் அமைச்சராக இருந்தபோது என்னென்ன செய்தார் என்பது எனக்கு தெரியும். நேர்மையை பற்றி சி.வி.சண்முகம் எனக்கு பாடம் எடுக்கக்கூடாது. என் நேர்மையை கொச்சைபடுத்தினால் யாராக இருந்தாலும் நான் விடமாட்டேன். இது தன்மானப் பிரச்சினை. கூனி, குனிந்து அடிபணிந்து போக வேண்டிய அவசியம் எனக்கும், பாஜகவுக்கு கிடையாது.
இது சுய மரியாதை கட்சி. கூட்டணி முக்கியம். அதிமுக சொல்வதை ஏற்றுக்கொண்டால் இரு கட்சிகளையும் இணைத்து விடலாமே? கூட்டணியில் இருந்தால் கொள்கை மாறுபாடுகள் இருக்கும். அதற்காக அடிமையாக இருக்க முடியாது. கூனி கும்பிட்டு அதிகாரத்துக்கு வர வேண்டிய அவசியமில்லை. பாஜக தனித்தன்மையுடன் 2026-ல் ஆட்சிக்கு வரும். இன்னொரு கட்சியின் 'பி' டீம், 'சி' டீம் ஆகவோ வராது. மற்றவர்களை ஏவி பதில் சொல்பவன் நான் அல்ல. பதிலை நானே சொல்வேன்”என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "தன்மானம் , சுயமரியாதை, பகுத்தறிவு இருக்கக்கூடிய மனிதன் எப்படி திமுகவை ஏற்றுக்கொள்வான்?. எப்படி உதயநிதி ஸ்டாலினை ஏற்பார்கள்?. உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் 4 அமைச்சர்கள், ஆட்சியர் கலந்துகொள்கிறார். அரசின் முழு பலத்தையும் காண்பித்து, பொது நல விழாவாக அறிவித்தும் மக்கள் வருவதில்லை. தமிழக மக்கள் திமுகவையும், உதயநிதியையும் நிராகரித்து விட்டார்கள்.
அதனுடைய பிதற்றுதல்தான் சனாதன தர்மம் குறித்த வெளிப்பாடு. திராவிட அரசியலில் குடும்ப அரசியல் வேண்டாம் என்று சொன்ன மாமனிதர் அண்ணாதுரை. சுத்தமான அரசியலை கொடுக்க நினைத்தவர். இன்று அண்ணாதுரைக்கு ஆதரவாக வருபவர்கள் அண்ணாதுரை வழிப்படி நடந்து கொள்கிறார்களா?. அண்ணாதுரையை நான் தவறாக சொல்லவில்லை. சரித்திரத்தை மறைத்து பேச வேண்டிய அவசியம் எனக்கில்லை.
குடும்ப ஆட்சியில் வந்த முதல்வருக்கு சனாதன தர்மம் குறித்து தெரியாது. அவர் மாநில பாடத்திட்டத்தின் பிளஸ் 2 புத்தகத்தை திறந்து படிக்க வேண்டும். அவர் சரியாக படிக்கவில்லை என்றால் 70 வயதில் நாங்கள் சொல்லிக் கொடுக்க முடியுமா?. கூட்டணியின் தேவை அனைவருக்கும் உண்டு. தனி மரம் எப்போதும் தோப்பாக முடியாது. தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மீது அனைவருக்கும் பயம் உள்ளது" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT