Published : 17 Sep 2023 05:44 PM
Last Updated : 17 Sep 2023 05:44 PM
சென்னை: தமிழகத்துக்கு சேரவேண்டிய நீரை கர்நாடகா உடனடியாக விடுவிக்க ஒன்றிய அரசு உத்தரவிட வலியுறுத்தி, ஒன்றிய ஜல் சக்தி அமைச்சரிடம், தமிழக அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழகத்தின் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை (செப்.18) கோரிக்கை மனு அளிக்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: "தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய அரசின் ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை, தமிழக அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழகத்தின் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினருடன் நாளை (செப்.18) மாலை சந்தித்து கர்நாடக அரசு இதுவரை தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய காவிரி நீரை அளித்திட காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு தேவையான அறிவுரைகள் வழங்கிடக் கோரி நேரில் சந்தித்து வலியுறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு (திமுக), எஸ்.ஜோதிமணி (இ.தே.கா), மு.தம்பித்துரை மற்றும் என்.சந்திரசேகரன் (அஇஅதிமுக), கே.சுப்பராயன் (சிபிஐ), பி.ஆர்.நடராசன் (சிபிஎம்), வைகோ (மதிமுக), தொல். திருமாவளவன் (விசிக), அன்புமணி ராமதாஸ் (பாமக), ஜி.கே.வாசன் (தமாகா), கே.நவாஸ் கனி (இயூமுலீ) மற்றும் ஏ.கே.பி. சின்னராஜ் (கொமதேக) ஆகியோர் ஒன்றிய அரசின் நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளனர்" இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT