Published : 16 Sep 2023 08:55 PM
Last Updated : 16 Sep 2023 08:55 PM

நடிகர் பாலாவின் நிதி உதவியால் மலைக்கிராம மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் வசதி

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சோளகனை மலைக்கிராம மக்களின் மருத்துவத் தேவைகளுக்காக நடிகர் பாலா, அவரது சொந்த நிதியில் வழங்கிய ஆம்புலன்ஸ் வாகன சேவையை ஈரோடு மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தொடங்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் கடம்பூர், குன்றி மலைவாழ் மக்களின் மருத்துவ தேவைகளுக்காக, நகைச்சுவை நடிகர் பாலா அவரது சொந்த நிதியில் இருந்து ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்துள்ளார். இந்த ஆம்புலன்ஸ் சேவை கடந்த மாதம் பயன்பாட்டுக்கு வந்தது. இதேபோல், மருத்துவ வசதி இல்லாத மலை கிராமங்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்தித் தரும் பணியை தொடரவுள்ளதாக நடிகர் பாலா தெரிவித்து இருந்தார்.

அதன் அடிப்படையில், ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் சோளகனை மலைக்கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, நடிகர் பாலா ரூ.5 லட்சம் மதிப்பில்,இலவச ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்துள்ளார். இந்த ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா மற்றும் 125 விவசாய குடும்பங்களுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கும் விழா சோளகனை மலைக்கிராமத்தில் இன்று நடந்தது. விழாவிற்கு நடிகர் பாலா தலைமை வகித்தார்.

உணர்வுகள் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் மக்கள் ராஜன் வரவேற்றார். ஈரோடு மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, இலவச ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கி வைத்து, தாமரைக்கரை மலைகிராம மக்களுக்கு விவசாய உபகரணங்களை வழங்கினார்.

சோளகனை கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், அவர்கள் அவசர மருத்துவ தேவைகளுக்கு 20 கி.மீ. தொலைவில் உள்ள பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக வர வேண்டியுள்ளது. தற்போது நடிகர் பாலா இலவசமாக வழங்கியுள்ள ஆம்புலன்ஸ், சோளகனை கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, மலைகிராம மக்கள் மருத்துவமனைக்கு செல்ல பயன்படுத்தப்படவுள்ளது. குறிப்பாக, முதியோர் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் அவசர சிகிச்சை பெற இந்த ஆம்புலன்ஸ் சேவை உதவியாக இருக்கும் என சோளகனை கிராம மக்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து தாமரைக்கரை கிராமத்தைச் சேர்ந்த 125 விவசாயிகளுக்கு, மண்வெட்டி, கடப்பாரை மற்றும் இரும்பு கூடை ஆகிய வேளாண் உபகரணங்களை நடிகர் பாலா வழங்கினார். “மருத்துவ உதவி தேவைப்படும் கிராமங்களைத் தேர்வு செய்து தொடர்ந்து என் சொந்த முயற்சியால் ஆம்புலன்ஸ் சேவைகளைத் தொடர்ந்து வழங்குவேன்’’ என பாலா தெரிவித்தார்.

முன்னதாக, விழாவுக்கு வந்திருந்த நடிகர் பாலா மற்றும் மாவட்ட வன அலுவலர் உள்ளிட்டோரை, பாரம்பரிய இசையுடன் நடனமாடி, மலைகிராம மக்கள் வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில், நடிகர் அமுதவாணன், மருத்துவர் பார்த்திபன் துரைசாமி, பர்கூர் வனச்சரகர் கே.பிரகாஷ், ஜேக்கப் லிவிங்ஸ்டன், உணர்வுகள் மருத்துவப் பிரிவு திட்ட இயக்குநர் பி.பூபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x