Published : 16 Sep 2023 08:07 PM
Last Updated : 16 Sep 2023 08:07 PM
மதுரை: “பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கலந்த விநாயகர் சிலைகளை விற்கலாம், வாங்கலாம், ஆனால் நீர்நிலைகளில் கரைக்கக் கூடாது” என உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த பிரகாஷ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ‘எனது சொந்த மாநிலம் ராஜஸ்தான். அங்கிருந்து 20 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் பாளையங்கோட்டை வந்தோம். பாளையங்கோட்டையில் கிருபாநகரில் வாடகை இடத்தில் களிமண், கலர் பவுடர் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதிக்கும் பொருட்களை பயன்படுத்தி கடவுள் சிலைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறேன்.
விநாயகர் சதுர்த்தியின் போது சனாதானம் மீது நம்பிக்கையுள்ளவர்கள் போலீஸார் அனுமதிக்கும் இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவது வழக்கம். விநாயகர் சதுர்த்தி காலத்தில் விநாயகர் சிலைகள் அதிகளவில் விற்பனையாகும். கடந்தாண்டு வரை விநாயகர் சிலை விற்பனைக்கு யாரும் இடையூறு ஏற்படுத்தவில்லை. இந்தாண்டு சிலை தயாரிப்பு தொழிலுக்காக வெளி நபர்களிடம் இருந்து ரூ.12 லட்சம் கடன் பெற்று தொழிலில் முதலீடு செய்துள்ளேன். கடந்த 3 வாரங்களாக சிலை தயாரிப்பு முழு வீச்சில் நடைபெற்றுள்ளது. செப். 15 முதல் விநாயகர் சிலை விற்பனை தொடங்கியுள்ளது.
இந்நிலையில் பாளை போலீஸாரும், வருவாய் அதிகாரிகளும் எங்கள் இடத்துக்கு வந்து விநாயகர் சிலைகளை யாருக்கும் விற்கக் கூடாது என உத்தரவிட்டதுடன், சிலை வாங்க வந்தவர்களையும் விரட்டியடித்தனர். இதுகுறித்து கேட்தற்கு, பிளாஸ்ட் ஆப் பாரிஸ் போன்ற ரசாயனம் கலந்து விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுவதால், அந்த சிலை கரைத்தால் நீர் நிலைகள் மாசடையும் என்பதால் விநாயகர் சிலைகளை விற்க அனுமதி மறுத்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
நான் தயாரித்துள்ள சிலைகளால் நீர் நிலைகளில் மாசு ஏற்படாது. இது குறித்து போதுமான விளக்கம் அளித்தும் விற்பனையை அனுமதிக்கவில்லை. எனவே, விநாயகர் சிலைகள் விற்பனை தொழிலில் தலையிடக் கூடாது, தடுக்கக் கூடாது என நெல்லை மாவட்ட ஆட்சியர், நெல்லை மாநகர் காவல் ஆணையர், பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் மாதவன் வாதிடுகையில், மனுதாரர் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பயன்படுத்தி செய்யப்பட்ட சிலைகளை விற்பனை செய்கிறார். இதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலரின் புகாரின் பேரில் சிலை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: நீர் நிலைகளில் சிலைகளை கரைப்பது தொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளது. அந்த வழிகாட்டுதல்கள் சிலை விற்பனைக்கு தடையாக இருக்கக்கூடாது. சிலைகள் சுற்றுச்சூழல் சார்புடையதாக இருந்தால் அதை தயாரிக்கவும், விற்கவும் தடை விதிக்க முடியாது. மனுதாரர் அனுமதிக்கப்பட்ட அளவில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார். இந்த சிலைகளை வாங்குபவர்கள் வீடுகள், கோயில்கள், திருமண மண்டபங்களில் வைக்கலாம். பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க அனுமதிக்க முடியாது.
அந்த சிலைகள் விற்கப்படுவதை அதிகாரிகள் தடுக்க முடியாது. இதில் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பது தொடர்பான விதிகள் மீறப்படவில்லை. மனுதாரர் தன்னிடம் சிலைகள் வாங்கும் நபர்களின் விபரங்களை பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு சிலை விற்பனையும் கணக்கில் வைக்கப்பட வேண்டும். இதற்காக மனுதாரர் தனி பதிவேடு பராமரிக்க வேண்டும். இந்த பதிவேட்டை அதிகாரிகள் ஆய்வு செய்யலாம்.
எந்த சூழ்நிலையிலும் தாமிரபரணி அல்லது பிற நீர்நிலைகளில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளை கரைக்க அனுமதிக்க முடியாது. சிலைகளை கரைக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நியாயமானது. அதே நேரத்தில் சிலை விற்பனையை தடுப்பது அடிப்படை உரிமை மீறலாகும். எனவே, மனுதாரரின் சிலை விற்பனையை அதிகாரிகள் தடுக்கக்கூடாது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT