Published : 16 Sep 2023 07:43 PM
Last Updated : 16 Sep 2023 07:43 PM

மினிமம் பேலன்ஸ் சிக்கலால் ரூ.1000 முழுதாக கிடைப்பதில்லை: முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

சென்னை: மினிமம் பேலன்ஸ் காரணம் காட்டி வங்கிகள் பிடித்தம் செய்யாமல் மகளிர் உரிமைத் தொகை முழுமையாக குடும்பத் தலைவிகளுக்கு கிடைக்கச் செய்திட நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், ''குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 வங்கிக் கணக்கில் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நேற்று தங்களால் துவக்கி வைக்கப்பட்டது. இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று குடும்பத் தலைவிகள் தெரிவித்துள்ளனர்.

வங்கிகள், சேமிப்புக் கணக்கு அல்லது நடப்பு வங்கிக் கணக்கு வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் குறைந்தபட்ச தொகை (Minimum Balance) இல்லாவிட்டால் தற்பொழுது தமிழக அரசு அவர்களது வங்கிக் கணக்குக்கு அனுப்பியுள்ள ரூபாய் 1000/-ல் இருந்து குறைந்தபட்ச தொகை இல்லாததற்கான தண்டத் தொகையும், குறுஞ்செய்தி அனுப்பியதற்கான தொகையையும் வங்கிகள் அவர்களது கணக்கிலிருந்து எடுத்துக் கொள்கின்றன. இதனால், சம்பந்தபட்ட குடும்பத் தலைவிகள் ஆயிரம் ரூபாயை முழுமையாக பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது அவர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

தங்களது வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச தொகையை வைக்க முடியாதவர்கள் ஒவ்வொரு மாதமும் இந்த சிரமத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்படும். இதனால், அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகை முழுமையாக அவர்களுக்கு கிடைக்காமல் போய்விடும்.

எனவே, தமிழக அரசு வங்கித் துறை அதிகாரிகளுடன் பேசி குறைந்தபட்ச தொகை (Minimum Balance) இல்லை என்கிற காரணத்தினால் எந்தத் தொகையும் பிடித்தம் செய்யாமல் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 முழுமையாக சம்பந்தப்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு கிடைக்கச் செய்திட உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்'' என்று அந்தக் கடிதத்தில் கே.பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x
News Hub
Icon