Published : 16 Sep 2023 06:50 PM
Last Updated : 16 Sep 2023 06:50 PM

அரிய தமிழி கல்வெட்டுகளை கண்டறிந்தவர் தொல்லியல் அறிஞர் பொ.ராசேந்திரன்: தங்கம் தென்னரசு புகழாரம்

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

மதுரை: “அரிய தமிழி கல்வெட்டுகளை கண்டறிந்து தமிழ்ச் சமூகத்துக்கு அளித்தவர் மறைந்த தொல்லியல் அறிஞர் பொ.ராசேந்திரன்” என அமைச்சர் தங்கம் தென்னரசு புகழஞ்சலி கூட்டத்தில் பேசினார்.

மதுரையில் இன்று பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் பொ.ராசேந்திரனின் புகழஞ்சலி கூட்டம், அதன் செயலர் சொ.சாந்தலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிதி, மனிதவள மேலாண்மைத்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பொ.ராசேந்திரன் உருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் பேசியதாவது: “தொல்லியல் அறிஞர் பொ.ராசேந்திரன், தொல்லியல் துறையில் முழுமையான உழைப்பை நல்கியவர். குடுமியான்மலை, அரிட்டாபட்டியில் பல அரிய தமிழி கல்வெட்டுகளை கண்டுபிடித்து தமிழ்ச்சமூகத்துக்கு அளித்தவர். அவர் கண்டறிந்த கல்வெட்டுகள், எழுதிய நூல்கள் மூலம் நிலைத்த புகழை அடைந்துள்ளார்.

பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் சார்பில் கோயில் சோழநாட்டில் கோயில் கட்டுமானக் கலைகளில் சிறந்து விளங்கிய சோழப் பேரரசி செம்பியன்மாதேவிக்கு சிறப்புச் சேர்க்க ஒரு நூல் வெளியிட வேண்டும் என்றேன். நீண்ட காலம் சோழநாட்டில் பணியாற்றியவர், தஞ்சை மாவட்டத்தை நன்கு அறிந்தவர் என்ற முறையிலும் நீங்கள் விரிவாக எழுத வேண்டும் என அவரிடம் கேட்டுக்கொண்டதால், மிகச் சிறப்பான நூலை உருவாக்கி தந்தார். அடுத்த நூலான தொல்லியல் ஓர் அறிமுகம் எனும் நூலை தமிழில் மொழிபெயர்த்து எழுதும்போது நம்மை விட்டு மறைந்தார்.

அண்ணா உயிர் பிரியும் வரை படித்துக் கொண்டிருந்ததைப்போல இறுதி மூச்சுவரை எழுதியவர். பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தை 10 ஆண்டுகளில் தலைமையேற்று வழிநடத்திய அவரது பெயரில் அறக்கட்டளை நிறுவி சொற்பொழிவுகள் நடத்தி புதிய தலைமுறையை உருவாக்க வேண்டும். கீழடி மூலம் தமிழ்ப்பண்பாட்டு விழுமியங்கள் உலகத்தின் பார்வைக்கு சென்றுள்ளது. தமிழக முதல்வரின் முன்னெடுப்புகளால் தமிழகத்தில் பல இடங்களில் அகழாய்வுகள் நடந்துவருகின்றன.

அதன்மூலம் பல அருங்காட்சியகங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. தற்போது தொல்லியல்துறை பலராலும் கவனிக்கப்படும் துறையாக வளர்கிறது. இதற்காக எதிர்காலத்தில் தொல்லியலில் மிகச்சிறந்த ஆய்வு மாணவர்களை உருவாக்க வேண்டும்” என்று அவர் பேசினார். இதில் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் மீ.மருதுபாண்டியன், தொல்லியல் அதிகாரி ஆசைத்தம்பி, மணியம்மை மழலையர் பள்ளி தாளாளர் வரதராசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய அலுவலர் உதயகுமார் நன்றி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x