Published : 16 Sep 2023 04:53 PM
Last Updated : 16 Sep 2023 04:53 PM

சனாதன தர்ம விமர்சனம் | ''பேச்சு சுதந்திரம் என்பது கட்டுப்பாடற்றது கிடையாது'' - ஐகோர்ட் நீதிபதி என்.சேஷசாயி

சென்னை: பேச்சு சுதந்திரம் என்பது கட்டுப்பாடற்றது அல்ல என்றும், மத நம்பிக்கைக்கு குறித்துப் பேசும்போது மற்றவர்களை காயப்படுத்தாமல் பேச வேண்டியது மிகவும் முக்கியம் என்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.சேஷசாயி தெரிவித்துள்ளார்.

திருவாரூர் அரசு கலைக் கல்லூரியில் சனாதன தர்மத்துக்கு எதிரான கருத்துகளைப் பகிரும்படி சுற்றறிக்கை வெளியிடப்பட்டதை எதிர்த்து இந்து முன்னணி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கல்லூரி வெளியிட்ட சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டுவிட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்த கொண்டு வழக்கை முடித்து வைத்த நீதிபதி சேஷசாயி கூறியது: "சனாதன தர்மம் என்பது இந்துக்களின் நித்திய கடமைகளின் தொகுப்பு. நாட்டுக்கான கடமை, அரசனுக்கான கடமை, பிள்ளைகள் பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமை, ஆசிரியருக்குச் செய்ய வேண்டிய கடமை, ஏழைகளை பாதுகாப்பதற்கான கடமை உள்ளிட்ட கடமைகளின் தொகுப்பு. இந்த கடமைகளை மேற்கொள்ளக் கூடாதா?

சனாதனம் சாதியவாதத்தையும், தீண்டாமையையும் ஊக்குவிப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. நாட்டில் தீண்டாமையை சகித்துக்கொள்ள முடியாது. அனைத்துக் குடிமக்களும் சமமானவர்கள். மதப் பழக்க வழக்கங்களில் சில மோசமான நடைமுறைகள் தெரியாமல் புழக்கத்தில் இருக்கலாம். அவற்றை களையெடுக்க வேண்டுமே தவிர, பயிரை ஏன் வேரறுக்க வேண்டும். தீண்டாமைக் கொடுமையை ஒழிக்கும் வகையில் மாணவ, மாணவியரை கல்லூரி ஊக்குவிக்கலாம்.

சனாதன தர்மத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் தற்போது கூச்சல்தான் அதிகமாக இருக்கிறது. பேச்சு சுதந்திரம் என்பது வெறுப்புப் பேச்சை பேசுவதற்கான சுதந்திரமாக இருக்க முடியாது. இவ்விஷயத்தில் அரசியல் சாசனம் தெளிவான வரையறைகளைக் கொண்டுள்ளது. வெறுப்பு பேச்சு பேசுவதை சட்டப்பிரிவு 19(2) கட்டுப்படுத்துகிறது. ஒவ்வொரு மதமும் நம்பிக்கைகளின் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டவை. எனவே, மத விவகாரங்கள் குறித்து பேசும்போது மற்றவர்களை காயப்படுத்தாமல் பேசுவது முக்கியம்'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x