Published : 16 Sep 2023 05:17 PM
Last Updated : 16 Sep 2023 05:17 PM
கள்ளக்குறிச்சி: 2024-ம் ஆண்டுக்குள் அனைத்து கிராம குடும்பங்களுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு கடந்த 2019-ம் ஆண்டு, மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன்) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் கீழ் உள்ளூர் நிலையில் நீரின் ஒருங்கிணைக்கப்பட்ட தேவை மற்றும் விநியோக மேலாண்மையின் மீது கவனம் செலுத்துதல், நீரை விவசாயத்துக்கு பயன்படுத்தும் வகையில் வீட்டுக் கழிவு நீர் மேலாண்மை, நிலத்தடி நீரை அதிகரித்தல் மற்றும் மழைநீர் சேகரிப்பு போன்ற உள்ளூர் கட்டமைப்புகளை ஏற்படுத்துதல் போன்றவை ஜல் ஜீவன் திட்டத்தின் நோக்கம்.
இந்தத் திட்டத்தின் மூலம் கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வதற்காக கடந்த 2021-22 நிதியாண்டில் ரூ.1 லட்சம் கோடி நிதி மத்திய அரசால் ஒதுக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டிலும் ஜல் ஜீவன் திட்டம் மற்றும் அத்திட்டத்தின் நீட்சியாக 15-வது மானிய நிதிக் குழு மூலம் கிராமப்புற குடியிருப்புகளுக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.
இதன்மூலம் தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள 1 கோடியே 24 லட்சம் குடும்பங்களில் 69 லட்சத்து 14 குடியிருப்புகளுக்கு ஜல் ஜீவன் திட்ட குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக பதிவேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர 15-வது மானிய நிதிக்குழு மூலமும் தமிழகத்தில் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 2022 அக்டோபர் மாதம் வரை 1,33,694 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதைப் பாராட்டி இந்திய அளவில் ஜல் ஜீவன் மிஷின் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டமைக்காக பிரதமரால் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு முதல் நிலை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
ஆனால் இந்திய அளவில் முதலிடம் பிடித்த இம்மாவட்டத்தில் இத்திட் டம் செயல்படுத்தப்படும் விதம் பொது மக்களிடையே முகம் சுளிக்கும் வகையில் உள்ளது.
உளுந்தூர்பேட்டை வட்டம் எஸ்.மலையனூர் கிராமத்தில் 15-வது மானிய நிதிக்குழு திட்டத்தின் கீழ்குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் குடியிருப்புக்கான குடிநீர் இணைப்பு வழங்கும் போது வீட்டு வரி செலுத்தி அதற்கான ரசீது இருந்தால் மட்டுமே அவர்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். ஆனால் மலையனூர் கிராமத்தில் விவசாய நிலத்துக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு, அவையும் குடியிருப்புக்கு குடிநீர் இணைப்பு வழங்கியது போன்று ஊராட்சித் தலைவர் கணக்கு காட்டியுள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
“எஸ்.மலையனூர் ஊராட்சி முழுவதும் குடிநீர் இணைப்புகள் குறித்து போலியான எண்ணிக்கையில் ஆவணப்படுத்தியுள்ளனர். வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்டத் திட்ட இயக்குநர் ஆகியோர் இதுகுறித்து முறையாக ஆய்வு செய்தால் மட்டுமே பல உண்மைகள் வெளிவரும்” என்கின்றனர் இங்குள்ள ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்
இதுதொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவர் ஜி.ராமசாமியிடம் கேட்டபோது, “நீங்கள் குறிப்பிடுவது போல எந்த இணைப்பும் வழங்கப்படவில்லை. விளைநிலத்துக்கு அருகாமையில் குடியிருப்பு உள்ளது. அதற்கு தான் இணைப்பு வழங்கியிருக்கிறோம். காழ்ப்புணர்ச்சி காரணமாக அவதூறாக சில விஷயங்களை சிலர் கூறி வருகின்றனர். அதில் இதுவும் ஒன்று” என்றார்.
இதுபோன்ற குற்றச்சாட்டுகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரவலாக உள்ளன. குறிப்பாக கூட்டடி கள்ளக்குறிச்சி, ஆரியநத்தம், திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட செங்குறிச்சி ஆகிய பகுதிகளில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகளில் முறைகேடுகள் நிலவுவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டமைக்காக பிரதமரால் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு முதல் நிலை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டிருக்கும் சூழலில், இத்திட்டத்தின் தொடர்ச்சியாக 15-வது மானிய நிதிக் குழு மூலம் குடிநீர் இணைப்பும் வழங்கப்படுகிறது. இந்த இரு திட்டங்களின் பயனாளிகளும் இக்குடிநீர் திட்டங்கள் குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. இதை சரி செய்ய வேண்டிய முக்கிய பொறுப்பு மாவட்ட நிர்வாகத்துக்கு உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...