Published : 16 Sep 2023 01:33 PM
Last Updated : 16 Sep 2023 01:33 PM

‘விஸ்வகர்மா’ திட்டத்தை எதிர்த்து குரல் எழுப்புவோம்: திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: நாடாளுமன்றத்தில் இண்டியா கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து பாஜக அரசை எதிர்கொள்வோம்; விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் குரலெழுப்புவார்கள் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இன்று திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தீர்மான விவரம் வருமாறு: “கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை” துவக்கி வைத்து ஒரு கோடிக்கும் மேற்பட்ட மகளிரின் குடும்பங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நன்றியை பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறது.

காவிரி நதிநீர் பிரச்சனையில் நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும் அளித்துள்ள தீர்ப்புகளை பொருட்படுத்தாமல், மழை குறைபாட்டைக் காரணம் காட்டி, தமிழ்நாட்டின் பங்கான நீரை கர்நாடக மாநிலம் விடுவிக்காததால் குறுவைப் பயிர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, சம்பா பயிரும் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு சேர வேண்டிய நீரை உடனடியாக விடுவிக்குமாறு கர்நாடக அரசுக்கு ஒன்றிய அரசு வலியுறுத்திட வேண்டும் எனக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

ஒன்றியத்தில் பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்து, தமிழ்நாட்டுக்கான திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை முடக்கி வைத்திருப்பது போல் இரண்டாவது கட்ட சென்னை மெட்ரோ ரயில் பணிக்கான நிதிஒதுக்கீட்டையும் செய்யவில்லை. முதல்வர் ஸ்டாலின் பிரதமரின் முதல் சந்திப்பிலேயே வலியுறுத்தியும், இன்று வரை ஒன்றிய அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்காமல் இழுத்தடித்து, தமிழ்நாட்டு உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு தடைக்கல்லை ஏற்படுத்தி வருகிறது.

பா.ஜ.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வால், தமிழ்நாட்டில் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. தமிழ்நாடு சட்டமன்றமே நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க மசோதாவை இரண்டு முறை ஒருமனதாக நிறைவேற்றி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த பிறகும் ஒன்றிய அரசு அந்த மசோதாவுக்கு இன்னும் ஒப்புதல் அளிக்காமலேயே இருப்பது பாஜக ஆட்சி தமிழ்நாட்டுக்கு செய்துவரும் மாபெரும் துரோகம். நீட் தேர்வு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதலை அளித்திட தொடர்ந்து நாடாளுமன்றத்தில் திமுக குரல் எழுப்பும்.

பெண்ணுரிமை வழங்குவதில் தலைசிறந்த மாநிலமாக மட்டுமின்றி, “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை” அண்ணா பிறந்தநாளன்று செயல்படுத்தியுள்ள சூழலில், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 விழுக்காடு பிரதிநிதித்துவம் அளிக்கும் மசோதா பற்றி வாயே திறக்காமல் காலத்தை கழித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாதிக்கும், இன்று அவர் வழியில் செயல்படும் முதல்வரும் மகளிர் மசோதாவை நிறைவேற்றக் கோரி எண்ணற்ற முறை கோரிக்கைகள் வைத்தும் அதன் மீதான விவாதத்திற்கு கூட பா.ஜ.க. அரசு தயாராக இல்லை. எனவே இந்த சிறப்பு கூட்டத்தில் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் 33 விழுக்காடு மகளிருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வலுவாக குரல் எழுப்ப இக்கூட்டம் முடிவு செய்துள்ளது.

இந்தியாவுக்கே முன்னோடியாக சமூகநீதிக்கான குரல் எழுப்பும் நமது இயக்கம், இச்சிறப்பு கூட்டத்தொடரில், “மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி ஒன்றிய அரசின் துறைகளில் முழு ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும்”, “அரசு துறைகளில் பதவி உயர்விலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்”, “தனியார் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்திட வேண்டும்”, “பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ள க்ரீமிலேயரை 25 லட்சமாக உயர்த்த வேண்டும்”, “உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி அடிப்படையில் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளோடு “இடஒதுக்கீட்டுக்கு உள்ள 50 விழுக்காடு உச்சவரம்பு நீக்கப்படும்” மசோதாவையும் இந்த சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்திலேயே கொண்டு வந்து நிறைவேற்ற வலியுறுத்துவோம்.

ஒன்றிய பா.ஜ.க. அரசால் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட “விஸ்வகர்மா யோஜானா” திட்டம், குலத் தொழிலை ஊக்குவிக்கும் வகையிலான நடைமுறைகளை வகுத்து, அதிலும் குறிப்பாக 18 வயது நிறைந்துள்ளவர்களை கல்லூரிக்கு செல்ல விடாமல், பரம்பரை தொழிலையே செய்யத் தூண்டும் குலத்தொழிலை மேலோங்கச் செய்யும் திட்டமிட்ட சூழ்ச்சி. இத்திட்டத்தையும் எதிர்த்து நாடாளுமன்றத்தில் கழக உறுப்பினர்கள் குரலெழுப்புவார்கள்.

எங்கள் ஆட்சி காலத்தில் நாட்டையே மாற்றுவோம் என பேசி வந்த ஒன்றிய பாஜக அரசு, தற்போது “இந்தியா” கூட்டணிக்கு அஞ்சி “பாரத்” என்று நாட்டின் பெயர் மாற்றுவதிலேயே உன்னிப்பாக இருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் - முற்றிலும் தோல்வியுற்ற ஒன்றிய பா.ஜ.க. அரசை, நாடாளுமன்றத்தில் “இந்தியா” கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து எதிர்கொண்டு இந்திய ஜனநாயகத்தை காத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஸ்வகர்கமா திட்டம்: கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தின்போது செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்துக்கு ரூ.13,000 கோடியை ஒதுக்கீடு செய்ய கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்தியஅமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. நாடு முழுவதும் விஸ்வகர்மா ஜெயந்தி நாளை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் தொடங்கி வைக்க உள்ளார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “பிஎம் விஸ்வகர்மா திட்டத்தில் இணைய விரும்புகிறவர்கள் பொது சேவை மையம் மூலம் https://pmvishwakarma.gov.in/ இணையத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இதன்படி பிஎம் விஸ்வகர்மா சான்றிதழ், அடையாள அட்டை ஆகியவை வழங்கப்படும். திட்டத்தில் இணைபவர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி வழங்கப்படும். தொழில் சார்ந்த கருவிகளை வாங்க ரூ.15,000 ஊக்கத் தொகைவழங்கப்படும். முதல் தவணையாக ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். இரண்டாம் தவணையாக ரூ.2 லட்சம் வரை 5 சதவீத வட்டியுடன் கடன் வழங்கப்படும்.

கைவினை கலைஞர்கள்: இந்த திட்டத்தின் மூலம் குரு - சீடன் பாரம்பரியம், கைவினைக் கலைஞர்களின் குடும்பங்களின் முன்னேற்றத்துக்கு ஊக்கம் அளிக்கப்படும். கைவினைக் கலைஞர்களின் தயாரிப்புகளின் தரத்தை மேம்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும். கைவினைக் கலைஞர்களின் தயாரிப்புகளை உள்நாடு, சர்வதேச விற்பனை சங்கிலியுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தச்சர், கொல்லர், பொற்கொல்லர், குயவர், சிற்பிகள், கல் தச்சர்கள், காலணி தைப்பவர், காலணி தொழிலாளர், காலணி செய்பவர், கொத்தனார், கூடை- பாய்- துடைப்பம் தயாரிப்பவர், கயிறு செய்பவர், பாரம்பரியமாக பொம்மைகள் செய்பவர், முடிதிருத்தும் தொழிலாளர், பூமாலைகள் கட்டுபவர், சலவைத் தொழிலாளர், தையல்காரர், மீன்பிடி வலை தயாரிப்பவர், படகு தயாரிப்பவர், கவசம் தயாரிப்பவர், சுத்தியல் மற்றும் கருவிகள் செய்பவர்கள், பூட்டுகள் செய்பவர்கள் ஆகியோர் பிஎம் விஸ்வகர்மா திட்டத்தில் இணையலாம்” என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x