Published : 16 Sep 2023 07:36 AM
Last Updated : 16 Sep 2023 07:36 AM
சென்னை: தமிழக பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: பதிவுத் துறையில் போலியான ஆவணங்கள் பதிவு செய்யப்படுவதை தடுக்கவும், விடுபடாமல் அரசுக்கு வருமானம் வருவதை உறுதி செய்யவும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கட்டிடங்கள் இருப்பதை மறைத்து, காலி நிலம் என்று ஆவணங்கள் பதிவு செய்யப்படுவதால் அரசுக்கு வரும் வருவாய் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. எனவே, காலி மனை இடங்களை ‘ஜியோ கோ-ஆர்டினேட்ஸ்’ உடன் புகைப்படம் எடுத்து, அதை ஆவணமாக இணைக்க வேண்டும் என்று கடந்த வாரம் அறிவுரை வழங்கப்பட்டது.
ஜியோ கோ-ஆர்டினேட்ஸ்: இந்நிலையில், பதிவு செய்யப்படும் ஆவணத்தில் குறிப்பிடப்படும் சொத்தின் பக்கத்தில் இருக்கும் காலி இடத்தை புகைப்படம் எடுத்து அதை ஆவணமாக சேர்த்து மோசடியாக பதிவுகள் நடப்பதாக புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து தீவிரமாக ஆய்வு செய்த தமிழக அரசு புதிய முடிவு எடுத்துள்ளது.
அதன்படி, சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் சொத்துகள் தொடர்பான அனைத்து ஆவணங்களிலும், அந்த சொத்து குறித்த புகைப்படம் ‘ஜியோ கோ-ஆர்டினேட்ஸ்’ உடன் எடுக்கப்பட்டு, அதை ஆவணமாக இணைக்க வேண்டும் என்று பதிவுத் துறை தலைவருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்த கூடுதல் வழிகாட்டுதல்களை பதிவுத் துறை தலைவர் தனியாக வழங்குவார். அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் வரும் அக்.1-ம் தேதி முதல் இந்த நடைமுறை பின்பற்றப்படும்.
இவ்வாறு பதிவுத் துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT