Published : 15 Dec 2017 10:07 AM
Last Updated : 15 Dec 2017 10:07 AM
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை பணிக்காக அழிக்கப்பட்ட நேரு பூங்கா, நவீன முறையில் புத்துயிர் பெற்றுள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பொங்கல் முதல் திறக்கப்படுகிறது.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள நேரு பூங்கா மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக அழிக்கப்பட்டது. அங்கிருந்து மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை பணிகள் நடைபெற்றன. இப்பணிகள் முடிந்ததும் அதே இடத்தில் மீண்டும் நேரு பூங்கா உருவாக்கித் தரப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்தது.
அதன்படி, நேரு பூங்கா இருந்த இடத்தின் அடியில் மெட்ரோ சுரங்க ரயில் பாதையும், மெட்ரோ சுரங்க ரயில் நிலையமும் அமைக்கப்பட்டன. அதுபோல திருமங்கலம் வரையிலும் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது. அதேநேரத்தில் திருமங்கலத்தில் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் வரை பறக்கும் பாதை அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நேரு பூங்காவில் இருந்து மீனம்பாக்கம் வரை அண்மையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கியது. நேரு பூங்கா பகுதியில் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை அமைக்கும் பணியை மேற்கொண்ட எல் அண்ட் டி நிறுவனம், நேரு பூங்காவை நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைத்து அழகாக உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:
``நேரு பூங்கா 8 ஆயிரம் சதுர மீட்டரில் (சுமார் 2 ஏக்கர்) உருவாக்கப்பட்டுள்ளது. ‘டிரை டெக்’ என்று அழைக்கப்படும் நவீன செயற்கை நீருற்று, பெரியவர்கள், சிறியவர்கள் விளையாடும் வகையிலும், நடந்து செல்லும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் விளையாடுமிடம், நடைப்பயிற்சி பாதை, தியானம், யோகா செய்வதற்கு தனி இடம் உள்ளது.
ஆங்காங்கே கற்களால் செய்யப்பட்ட இருக்கைகள், அழகிய சிற்பங்கள், அலங்கார மூங்கில், குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் உள்ளன. பூங்கா முழுவதும் 11 ஆயிரம் 281 அலங்கார செடிகள், மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. 3 ஆயிரத்து 800 சதுர மீட்டரில் புல்தரை அமைக்கப்பட்டுள்ளது.
இதுவரை 90 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. அனைத்து பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பொங்கல் முதல் திறக்கப்படும்.
இதுபோல் ஷெனாய் நகரில் திரு.வி.க.பூங்காவையும் நவீன முறையில் வணிக வளாகத்துடன் கட்டுவதற்கு திட்டமிட்டு வருகிறோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT