Published : 16 Sep 2023 06:36 AM
Last Updated : 16 Sep 2023 06:36 AM
ரவுடிகளை கண்காணிப்பது தொடர்பாக இந்திய அளவில் நடைபெற்ற ‘சைபர் செயலி’ போட்டியில் தமிழக காவல்துறைக்கு 3-வது இடம் கிடைத்துள்ளது.
‘குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு நெட்வொர்க் மற்றும் அமைப்புகள்’ என்ற தலைப்பில் சைபர் சேலஞ்ச் என்ற பெயரில் போட்டியை தேசிய குற்ற ஆவண காப்பகம் நடத்தியது. டெல்லியில் நடைபெற்ற இப்போட்டியில் அனைத்து மாநில போலீஸாரும் கலந்து கொண்டனர்.
“மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் காவல் துறையிடம் கிடைக்கும் தொழில்நுட்ப பயன்பாட்டின் ஒப்பீட்டு மதிப்பீடு" என்றபிரிவின்கீழ், தமிழக போலீஸார் கொண்டுவந்த டிராக் கேடி (TracKD) செயலி அனைத்து மாநிலங்களுடன் நடந்த போட்டியில் 3-வது இடத்தை பெற்றுள்ளது. போட்டிக்கான பரிசளிப்பு விழா டெல்லியில் உள்ள தேசிய குற்றஆவண காப்பகத்தில் நடைபெற்றது. இந்த செயலியை வடிவமைத்ததென் சென்னை காவல் கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, இந்த 3-வது பரிசுக்கான விருதை பெற்றுக் கொண்டார்.
கடந்த 25.11.2022-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட "டிராக்கேடி" செயலி, ரவுடிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்க உருவாக்கப்பட்டது. இந்த செயலி காவல்துறை அதிகாரிகளுக்கு ரவுடிகள், குற்ற பின்னணி கொண்டோரின் தகவல்களை விரல் நுனியில் தருகிறது.
மேலும், 39 மாவட்டங்கள்மற்றும் 9 காவல் ஆணையரகங்களில் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரவுடிகளின் விவரங்கள் கணினிமயமாக்கப்பட்டு உள்ளதுடன், ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ள இச்செயலி பெரிதும் உதவி வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT