Published : 16 Sep 2023 07:01 AM
Last Updated : 16 Sep 2023 07:01 AM

அண்ணா சாலையில் அடுத்தடுத்து போக்குவரத்து குளறுபடி: ஸ்பென்சர் அருகே நெரிசலை ஏற்படுத்தும் புதிய ‘யூ' வளைவு

சென்னை அண்ணாசலை ஸ்பென்சர் அருகே உள்ள சிக்னலில் வலது புறம் திரும்பி தாஜ் கன்னிமாரா ஓட்டல் வழியாக எழும்பூர் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்ணாசாலையில் நேராக சென்று டிவிஎஸ் பேருந்து நிறுத்தம் முன்பு உள்ள சிக்னலில் யூ வளைவு வந்து மீண்டும் ஸ்பென்சர் சிக்னலில் இடது புறம் திரும்பி எழும்பூர் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். படம்: ம.பிரபு

சென்னை: வாலாஜா சாலை, அண்ணா சாலை சந்திப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம் வாகன ஓட்டிகளுக்கு உயிர் பயத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போதுஸ்பென்சர் பிளாசா அருகே புதிய`யூ' வளைவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அண்ணா சாலையில் அடுத்தடுத்து நடைபெறும் இதுபோன்ற போக்குவரத்து குளறுபடிகளால் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகச் சென்னை போக்குவரத்து போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வாகனங்கள் தேங்காமல், விரைந்து செல்லும் வகையில் சிக்னல்கள் குறைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக `யூ' வளைவுகள் ஆங்காங்கே ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பல இடங்களில் இதற்கு நல்லபலன் கிடைத்தாலும் ஒரு சில இடங்களில் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகும் நிலை உள்ளது. அந்த வகையில் திருவல்லிக்கேணி வாலாஜா சாலை, அண்ணா சாலை சந்திப்புஅண்ணா சிலை அருகே ஏற்படுத்தப்பட்ட ‘யூ’ வளைவு, இன்று வரைவாகன ஓட்டிகளுக்கு உயிர் பயத்தைக் காட்டி வருகிறது.

இந்நிலையில், தற்போது சென்னை போக்குவரத்து போலீஸார் அண்ணா சாலையில் ஸ்பென்சர் பிளாசா அருகே புதிய போக்குவரத்து மாற்றத்தை 2 நாட்களாக நடைமுறைப்படுத்தி உள்ளனர். அதாவது, அண்ணா சாலையில் சென்ட்ரலில் இருந்து, அண்ணா மேம்பாலம் நோக்கிச் செல்லும் வழியில் எல்ஐசி கட்டிடத்தைத் தாண்டி ஸ்பென்சர் பிளாசா சந்திப்பில் ‘யூ’ வளைவு எடுத்து வலதுபுறம் திரும்பி மீண்டும் அண்ணா சாலை வழியாக சென்ட்ரல் நோக்கிச் செல்ல முடியும்.

மிகவும் குறுகிய வளைவு: `யூ' வளைவில் வலதுபுறம் திரும்பாமல் நேராகச் சென்றால் தாஜ் கன்னிமாரா ஓட்டல் அருகேஉள்ள சாலை (பின்னி சாலை) வழியாக எழும்பூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் எளிதாகச் செல்லலாம். ஆனால், போக்குவரத்து போலீஸார் நெரிசலைக் குறைக்க `யூ' வளைவை அகற்றுகிறோம் என்ற பெயரில், தடுப்பு வேலிகள்மூலம் அடைத்துவிட்டு, அதிலிருந்து 100 மீட்டர் தொலைவில் புதிய `யூ' வளைவை ஏற்படுத்தி உள்ளனர். மிகவும் குறுகிய அந்தவளைவில் வாகன ஓட்டிகள் திரும்ப முடியாமல் திக்குமுக்காடுகின்றனர்.

மேலும், ஸ்பென்சர் பிளாசாஅருகே நடு சாலையில் இரும்புதடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால் அண்ணா சாலை வழியாக அண்ணா மேம்பாலம் செல்லும் வாகனங்கள் வழக்கமான வேகத்தில் செல்ல முடியாமல் குறைந்த வேகத்தில் நகர்ந்து செல்கின்றன. இதனால், அப்பகுதிகளில் தேவையற்ற செயற்கையான போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன தேக்கநிலை ஏற்படுகிறது.

பழையபடி அனுமதிக்க வேண்டும்: எனவே, அண்ணாசாலை, வாலாஜா சாலை சந்திப்பு மற்றும் ஸ்பென்சர் பிளாசா அருகே உள்ள புதிய `யூ' வளைவு போன்றவற்றை நீக்கி, பழையபடியே இந்த பகுதிகளில் வாகனங்கள் செல்ல போக்குவரத்து போலீஸார் அனுமதிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x