Published : 05 Jul 2014 08:05 AM
Last Updated : 05 Jul 2014 08:05 AM

மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.4 ஆயிரம் கோடி யாருக்கு?: கரும்பு விவசாயிகள் பெயரில் கொள்ளைபோகும் மக்கள் பணம்

தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய், வட்டி இல்லா கடன் வழங்கப்போவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதன் பின்னணியில் தனியார் சர்க்கரை ஆலை முதலாளிகளின் கூட்டு முயற்சி இருப்பதாக விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கரும்பு விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயக் கடன்கள் வழங்கப்படுகின்றன. இதற்கு அதிகபட்சம் ஓராண்டு வரை வட்டி கிடையாது. அதற்கு பிறகு ஏழு சதவீதம் வட்டி செலுத்த வேண்டும்.

கரும்பை விவசாயிகளிடம் அரசு நிர்ணயித்த விலையில் கொள்முதல் செய்துகொள்ளும் சர்க்கரை ஆலை நிர்வாகங்கள், அதற்கான தொகையை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் செலுத்திவிட வேண்டும். அதில் கடனுக்கான தொகையை கழித்துக்கொண்டு மீதியை விவசாயிகளின் சேமிப்புக் கணக்கில் கூட்டுறவு சங்கங்கள் வரவு வைத்துவிடும். இதுதான் நடைமுறை.

ஆனால், கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக விவசாயிகளுக்கு தரவேண்டிய கரும்புக்கான கூலி நிலுவைத் தொகையை பெரும் பாலான ஆலை நிர்வாகங்கள் குறித்த காலத்தில் தருவதில்லை. பல நேரங்களில் இந்தத் தொகையைக் கேட்டு கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்துவர். உடனே, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் சர்க்கரை ஆலை நிர்வாகத்தையும் விவசாயிகளையும் அழைத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்துவர்.

“எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு விட்டது. அதனால், இப்போதைக்கு இவர்களுக்கு கூலி நிலுவைத் தொகையை வழங்க நிதியில்லை” என்று ஆலைகள் தரப்பில் நீலிக் கண்ணீர் வடிப்பர். இதை அப்படியே பதிவு செய்யும் ஆட்சியர்கள், ‘பிரச்சினையை சமாளிக்க அரசு தரப்பில் ஆலை நிர்வாகங்களுக்கு நிதியுதவி அளிக்கலாம்’ என்று அரசுக்கு அறிக்கை அளிப்பர்.

இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆலை நிர்வாகத்துக்கு குறைந்த வட்டிக்கு மத்திய அரசு நிதி வழங்கும். இந்த நிதியைக் கொண்டு விவசாயிகளின் கூலி நிலுவையில் ஒரு பகுதியை செட்டில் செய்யும் ஆலை நிர்வாகத்தினர் மீண்டும் பழையபடி பஞ்சப்பாட்டு பாட ஆரம்பித்து விடுவர்.

இதுபோன்ற நேரங்களில் மத்திய அரசு நேரடியாக தலையிட்டு சர்க்கரை ஆலை நிர்வாகங்களுக்கு குறிப்பிட்ட கோடிகளை வட்டி யில்லாக் கடனாக வழங்கும். இதுவும் முழுமையாக விவசாயிகளுக்குப் போய் சேர்வதில்லை என்பதுதான் கொடுமை.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய கூட்டுறவுத் துறை அதிகாரிகள், ‘‘ஏதோ விவசாயிகளின் துயர் துடைக்க மத்திய அரசு இப்படி வட்டியில்லாக் கடனை சர்க்கரை ஆலைகளுக்கு வழங்குவதாக நினைத்து விடாதீர்கள். இதன் பின்னணியில் மிரள வைக்கும் அரசியல் லாபி இருக்கிறது. சிமெண்ட் தொழிலைப் போல வடமாநிலங்களில் சர்க்கரை ஆலை தொழிலில் மத்திய - மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பெருந்தலைகள் பலர் சம்பந்தப்பட்டுள்ளனர். சர்க்கரை உற்பத்தி, விலை நிர்ணயம் இதெல்லாம் இவர்கள் கையில்தான் உள்ளது. இவர்கள் நினைத்தால் செயற்கையான சர்க்கரை தட்டுப்பாட்டை உருவாக்குவர். உடனே மத்திய அரசு சர்க்கரையை இறக்குமதி செய்ய முடிவெடுக்கும். அப்போது மத்திய அரசிடம் லாபி செய்து இறக்குமதியை கைவிட வைத்து சர்க்கரை விலையை உயர்த்த வைத்துவிடுவர்.

மாதச் சம்பளம் பெறும் நடுத்தர வர்க்கத்தை வரி, வரி என வாட்டி வதைக்கும் மத்திய அரசு கோடிகளில் கொழிக்கும் இந்த ஆலை முதலாளிகளுக்கு மக்களின் வரிப்பணத்தை வட்டியில்லாக் கடனாக வாரி வழங்குகிறது.

மாதச் சம்பளம் பெறும் நடுத்தர வர்க்கத்தை வரி, வரி என வாட்டி வதைக்கும் மத்திய அரசு கோடிகளில் கொழிக்கும் இந்த ஆலை முதலாளிகளுக்கு மக்களின் வரிப்பணத்தை வட்டியில்லாக் கடனாக வாரி வழங்குகிறது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு 6,600 கோடி ரூபாயை வழங்கினர். இப்படி, கடந்த இருபது வருடங்களில் லட்சம் கோடிக்கு மேல் சர்க்கரை ஆலைகளுக்கு வட்டியில்லாக் கடனாக வாரி வழங்கி இருக்கிறது மத்திய அரசு. பெரும்பாலான ஆலைகள் இந்த நிதியையும் தங்களது பிற தொழில்களில் முதலீடு செய்துவிட்டு விவசாயிகளை திண்டாட விடுகின்றன.

சர்க்கரை ஆலைகளுக்கு கொடுக்கும் வட்டியில்லாக் கடன்கள் திரும்பி செலுத்தப்பட்டதா. அதற் கான காலக்கெடு என்ன? இதுகுறித்து எல்லாம் யாரும் கேள்வி கேட்பதில்லை. இதில் இன்னுமொரு வேதனை என்ன வென்றால், விவசாயக் கடன்கள் தள்ளுபடியாகும்போது கரும்பு விவசாயிகளின் கடன்களும் தள்ளு படி செய்யப்படுகின்றன. இதன் மூலம் சர்க்கரை ஆலை நிர்வாகங் கள் இரட்டிப்பு லாபம் அடைகின்றன.

இதுகுறித்து அண்மைக்கால மாகத்தான் கரும்பு விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு வந்தி ருக்கிறது. அதனால்தான் இந்த முறை மத்திய அரசு தருவதாக அறிவித்திருக்கும் நாலாயிரம் கோடியை நேரடியாக கரும்பு விவசாயிகளிடமே வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன” என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x