Published : 16 Sep 2023 04:49 AM
Last Updated : 16 Sep 2023 04:49 AM
சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் ஒப்பந்ததாரர்களுக்கு இடையே உள்ள பிரச்சனைகளால் டெண்டருக்கு முட்டுக்கட்டை போடுவதால், நிதி வந்தும் டெண்டர் விட முடியாமல் வளர்ச்சி பணிகள் கிடப்பில் உள்ளன. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகள் இணைக்கப்பட்டு கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று அக்கட்சியை சேர்ந்த சங்கீதா மேயராகவும் விக்னேஷ் பிரியா துணை மேயராகவும் தேர்வு செய்யப்பட்டனர். முதலில் கவுன்சிலர்கள் திருத்தங்கல், சிவகாசி என பிரிவாக பிரிந்து பிரச்சனையை கிளப்பி வந்தனர். அதன்பின் குடிநீர் இணைப்பு வழங்கியதில் முறைகேடு புகார், சொத்து வரி தொடர்பான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக எழுந்த புகார், திமுக கவுன்சிலரை தகுதி நீக்கம் செய்யக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பியது, கவுன்சிலரின் கணவர் கொலை மிரட்டல் விடுத்ததாக ஆணையர் போலீஸில் புகார் அளித்தது என அடுத்தடுத்து சிவகாசி மாநகராட்சியில் தொடர் சர்ச்சைகள் நிலவி வந்தது.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக சிவகாசி மாநகராட்சியில் சர்ச்சைகள் ஏதுமின்றி அமைதியாக பணிகள் நடந்து வந்தது. கடந்த 31-ம் தேதி சிவகாசி மாநகராட்சி ஒப்பந்ததாரர் பாண்டிமுருகன், 'மாநகராட்சியில் முடிந்த பணிகளுக்கு, உரிய நேரத்தில் நிதி வழங்காமல் ஆணையர் காலம் தாழ்த்தி வருகிறார். ஒப்பந்ததாரருக்கு நிதி வழங்கும்படி கூறிய பொறியாளரை ஆணையர் ஒருமையில் பேசியதாக' வீடியோ பதிவு வெளியிட்டார்.
தொடர்ந்து 13-ம் தேதி சிவகாசி அனைத்து ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கம் சார்பில் ஆணையரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனிடையே, ஒப்பந்ததாரர் கருப்பசாமி என்பவர் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள வீடியோவில் 'மாநகராட்சியில் பணிகளை முடிக்காமல் அதற்குரிய தொகை வழங்கப்படுவதாக கடந்த ஆகஸ்ட் மாதம் ஆணையருக்கு புகார் கடிதம் எழுதியிருந்தேன். இந்நிலையில் ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் ஆணையர் பில் தொகை வழங்க கால தாமதம் செய்வதாக கூறி ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளார். மேலும் போட்டி டெண்டர் போட்டு பணிகளை நிறுத்துகிறார். ஆர்ப்பாட்டம் நடத்தி ஆணையர் மற்றும் அதிகாரிகளை மிரட்டும் வகையில் செயல்படுகிறார். அவர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சங்க உறுப்பினர்கள் 7 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். அவர் மீது 154 விதியின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
இப்படி ஒப்பந்ததாரர்களுக்கு இடையே உள்ள பிரச்சனை காரணமாக டெண்டருக்கு முட்டுக்கட்டை போடுவதால் மாநகராட்சியில் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சிவகாசி மாநகராட்சியில் 7 தெருக்களில் பேவர் பிளாக் சாலை அமைக்கவும், ஒரு தெருவில் தார் சாலை அமைக்கவும் கடந்த 6 மாதங்களுக்கு முன் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அத்திட்டத்திற்கு டெண்டர் விடப்பட்டாததால் இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் 1-வது மண்டலம் 5-வது வார்டு பேட்டை தெருவில் கடந்த 2021-ம் ஆண்டு பாலம் அமைக்கும் பணிக்காக தூண்கள் அமைக்கப்பட்ட பின் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் பாலம் அமைப்பதற்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் தீர்மானம் டெண்டர் விடப்படும் இன்னமும் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. அதேபோல் சிவகாசி நகராட்சி நூற்றாண்டு நிதியில் ரூ.50 கோடியில் 28.53 கிலோ மீட்டர் தூரமுள்ள 48 சாலைகள் அமைக்கவும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் 6.59 கிலோ மீட்டர் சாலை அமைக்க ரூ.8 கோடியும், நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில் ரத வீதிகள் உட்பட 10.45 கிலோ மீட்டர் சாலை அமைக்க ரூ.16 கோடியும், நகர சாலை மேம்பாட்டு திட்டத்தில் 8 கிலோ மீட்டர் தூரம் சாலைகளை சீரமைக்க ரூ.3.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டு உள்ளது. ஆனால் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் முழுமையாக நிறைவடையாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சாலை பணிகள் நிறைவடையாமல் கிடப்பில் உள்ளது.
சிவகாசி மாநகராட்சியில் சிறப்பு திட்டங்களின் கீழ் நிதி வந்தும் கிடப்பில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment