Published : 16 Sep 2023 12:17 AM
Last Updated : 16 Sep 2023 12:17 AM
சென்னை: நாட்டிற்கே முன்னோடியான திட்டங்களைச் செயல்படுத்தி வரும் திராவிட மாடல் ஆட்சி என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், "நாட்டிற்கே முன்னோடியான திட்டங்களைச் செயல்படுத்தி திராவிட மாடலில் தமிழ்நாட்டைத் தலைநிமிர்த்தி வருகிறோம். காலை உணவுத் திட்டம் மாணவர்களின் வருகையை உயர்த்தி, கற்றல் திறனை மேம்படுத்துகிறது. இப்போது கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தால் உழைக்கும் மகளிரின் சிரமத்தைச் சற்று போக்கியிருக்கிறோம்.
தாயாகக் கருணையையும் - மனைவியாக உறுதுணையையும் - மகளாகப் பேரன்பையும் பொழியும் மகளிர்க்குத் 'தாயுமானவராகத்' தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படும்." இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னதாக காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைத்து பேசுகையில், "இத்திட்டத்தை தொடங்கி வைப்பதை என் வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய பேறாக கருதுகிறேன். தாய் தமிழ்நாட்டுக்கு, தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் பேரறிஞர் அண்ணா. இனி, இந்தப் பெயரை யாராலும் நீக்க முடியாது.
இந்த பெயர் நீட்டிக்கும் காலம் எல்லாம் நாட்டை அண்ணாதுரைதான் ஆள்கிறார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைக்கும் நான் சொல்கிறேன், இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்த மகளிர் உரிமைத் தொகையைப் பெறுகிறார்களோ, அத்தனை ஆண்டுகளும் இந்த ஸ்டாலின்தான் ஆள்கிறான் என்று பொருள்.
இந்த இரண்டரை ஆண்டுகளில் எத்தனை பயனுள்ள திட்டங்கள், விடியல் பயணத் திட்டம், பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம், உயர்கல்வி கற்க வரும் மாணவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், இந்த திட்டங்களை எல்லாம் தொடங்கியபோது எப்படிப்பட்ட மகிழ்ச்சையை அடைந்தேனோ, அதைவிட அதிகமான மகிழ்ச்சியில் நான் இருக்கிறேன்.
இந்த ஆயிரம் ரூபாய் உங்கள் வாழ்க்கைக்கு உதவியாக இருக்கப்போகிறது. நாள் தோறும் உதிக்கும் உதயசூரியன் உங்களுக்கு புத்துணர்ச்சியைப் போல, இந்த ஆயிரம் ரூபாய் உங்களுக்கு பயன்படப் போகிறது. இது திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த வாக்குறுதி. ரொம்ப முக்கியமான வாக்குறுதி. இது நிறைவேற்ற முடியாத வாக்குறுதி, பொய்யான வாக்குறுதியைக் கொடுத்து மக்களை ஏமாற்றிவிட்டனர். இவர்களால் தரமுடியாது என்று பொய் பரப்புரையை தங்களுடைய உயிர் மூச்சாக வைத்து வாழும் சிலர் கூறினார்கள்.
ஆட்சிக்கு வந்ததுமே கொடுத்திருப்போம். ஆனால், நிதி நிலைமை சரியாக இல்லை. அதனால்தான், நிதி நிலையை ஓரளவுக்கு சரிசெய்துவிட்டு, இப்போது கொடுக்கிறோம். இதையும் சிலரால் தாங்க முடியவில்லை. பொய்களையும், வதந்திகளையும் பரப்பி இந்த திட்டத்தை முடக்க நினைத்தார்கள். அறிவித்துவிட்டால், எதையும் நான் நிறைவேற்றிக் காட்டுவேன் என்று தமிழக மக்களாகிய உங்களுக்கு நன்றாகத் தெரியும்." என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT