Published : 15 Sep 2023 06:48 PM
Last Updated : 15 Sep 2023 06:48 PM
புதுச்சேரி: “புதுச்சேரியில் ரூ.1000 உதவித் தொகை, எம்எல்ஏக்கள் மூலம் அவரவர் தொகுதியில் உள்ள தகுதியானவர்கள் அடையாளம் காணப்பட்டு அனைவருக்கும் வழங்கப்படும்” என்று அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் பொதுமக்கள் குறைத் தீர்ப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து குறைகளைக் கேட்டறிந்த ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இந்தக் கூட்டத்தில் ஆளுநரின் தனிச் செயலாளர் மாணிக்கதீபன் உடன் இருந்தார். ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அப்போது செய்தியாளர்களிடம் கூறியது ''அரசு அலுவலகங்களில் குறைகளைக் கேட்க ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அதன்படி குறைதீர்ப்புக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. பல துறைகளில் இருந்தும் குறைகளைச் சொல்லியிருக்கிறார்கள். அதிகாரிகளும் உடனிருந்தார்கள். அவற்றிற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவ, மாணவிகள் வருகிறார்கள் அவர்கள் சந்திக்கும் சிக்கல்களை கூறுகிறார்கள். அலுவலகத்தில் சில சிக்கல்கள் எல்லாவற்றையும் தீர்த்து வைக்கும் முயற்சி செய்கிறோம். மக்களைச் சந்திப்பதில் எனக்கு விருப்பம். அது விமர்சனத்துக்கு உள்ளாகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் மக்களைச் சந்தித்தால் எனக்கு மகிழ்ச்சி. ஆளுநரால் மக்களைச் சந்திக்க முடியும், சில சிக்கல்களைத் தீர்த்து வைக்க முடியும். தீர்த்து வைக்கச் சொல்ல முடியும். அதனால் அவர்களை சந்திக்கிறேன். மக்கள் தொடர்பு என்பது எனக்கு விருப்பமானது. சுகாதாரத்துறை அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தப்பட்டு இருக்கிறது.
நிபா, டெங்கு போன்றவற்றை தடுக்க ஏற்பாடுகள், அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவது, அவசர சிகிச்சைப் பிரிவில் அதிகமாக நோயாளிகள் வரும்போது அவர்கள் தங்குவதற்கான இடவசதி ஏற்படுத்துவது, செவிலியர் கல்லூரி தொடங்குவதற்கான நடைமுறைகளை விரைவுபடுத்துவது, செவிலியர் பற்றாக்குறையைச் சரி செய்ய நடவடிக்கை ஆகியவை விவாதிக்கப்பட்டது. பிரதமரின் டயாலிசிஸ் முறையில் சிறுநீரக நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த திட்டம் செயல்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. எல்லா விதத்திலும் மக்கள் அரசு மருத்துவமனைகளை நம்பி வரவேண்டும் என்பதற்காக அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு பல திட்டங்களைக் கொடுத்திருக்கிறார்கள். சுகாதார அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சேவா பக்வாடா இந்த மாதம் 17 முதல் அடுத்த மாதம் 17 வரை நடக்க இருக்கிறது. எல்லா விதத்திலும் புதுச்சேரி மக்கள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்பது பற்றி வாதித்தோம். புதுச்சேரியில் உள்ள பூங்காக்களையும், சாலை நடுவில் உள்ள தடுப்புக் கட்டைகளையும் சரி செய்ய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. யோகா உடற்பயிற்சி செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் அனைத்து பூங்காக்களும் சரி செய்யப்படும். அந்தந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு உடற்பயிற்சி செய்யவும், குழந்தைகள் விளையாடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
ஆளுநருக்கு வரும் எந்தக் கோப்புகளையும் 24 மணி நேரத்துக்குள் அனுப்பி விடுகிறேன். புதுச்சேரியில், சாமானிய மக்கள் பயன் பெறவேண்டும், மாணவர்கள், செவிலியர் கல்வி பெறவேண்டும் என்று பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். பெஸ்ட் புதுச்சேரியை ஃபாஸ்ட் (விரைவு) புதுச்சேரியாக மாற்ற வேண்டும் என எல்லா முயற்சியும் எடுக்கப்படுகிறது. புதுச்சேரியை அழகு படுத்த வேண்டும் என்று முயற்சி எடுத்து வருகிறோம்.
பெண்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.1000 தொடக்கத்தில் தகுதி உடைய 13 ஆயிரத்திலிருந்து 17,000 பேர்களுக்கு வழங்கியிருக்கிறோம். அதன் பிறகு சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூலம் அவரவர் தொகுதியில் உள்ள தகுதியானவர்கள் அடையாளம் காணப்பட்டு அனைவருக்கும் வழங்கப்படும். புதுச்சேரியில் அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. எல்லா வகையிலும் புதுச்சேரி முன்னேற முயற்சி மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் குறைதீர்ப்புக் கூட்டம் நடத்துவது மூலமாக மக்கள் குறைகளை தீர்த்து வைக்க முடிகிறது. பெண்கள் அதிகம் வருகிறார்கள்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT