Published : 15 Sep 2023 05:16 PM
Last Updated : 15 Sep 2023 05:16 PM
கும்பகோணம்: “மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் அனைத்து குடும்பத் தலைவிக்கும் வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு, தகுதியின் அடிப்படையில் தொகை வழங்கியுள்ளது திமுகவின் ஏமாற்று வேலையாகும்” என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
கும்பகோணம் வட்டம் சுவாமி மலையிலுள்ள தனியார் விடுதியில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: "கோடநாட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை நோக்கி போலீஸார் 80 சதவீதம் நெருங்கி விட்டார்கள், இந்த விஷயத்தில் தமிழக அரசு சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போதுள்ள அதிமுகவுக்குப் பதவி, பணம் மட்டும்தான் நிலைப் பாடாகவுள்ளது. தற்போது இரட்டை இலை துரோகிகள் கையிலுள்ளது. அந்த இரட்டை இலையைக் காலம் மீட்டுத் தரும்.
திமுகவின் தேர்தல் அறிக்கையில் 90 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. ஆனால், பெரும்பாலானவற்றை நிறைவேற்றி விட்டோம் என முதல்வர் கூறியுள்ளார். இந்த ஆட்சியாளர்கள் ஏழைகளின் அழுகையில் இன்பம் அடைகிறார்கள். அண்ணா தொடங்கிய திமுகவைக் கையில் வைத்திருக்கும் மு.க.ஸ்டாலின் தற்போது ஹிட்லர் போல் செயல்படுகிறார்.
தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற மக்கள் விரோத ஆட்சியை யாரும் குற்றம் சொல்லக்கூடாது என இதிலிருந்து தப்பிப்பதற்காக இந்த சனாதனத்தைப் பற்றி, தமிழக முதல்வர் தனது மகனைக் கொண்டு பேச வைத்துள்ளார். அதனால், இந்த சனாதனத்தை தற்போது தூசி தட்டி எடுத்துள்ளார்கள். ஒரு கட்சி என்றால் அனைத்து மதங்களுக்கும் பொதுவாக செயல்பட வேண்டும். ஆனால், இவர்கள் அதையும் மீறி செயல்படுகிறார்கள்.
காவிரி நீர் தொடர்பாக கர்நாடக அரசு உச்சநீதிமன்றத் தீர்ப்பை எப்போதும் மதிப்பதில்லை. காங்கிரஸ் கூட்டணியிலுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி சோனியா காந்தியிடம், கர்நாடகா அரசு செய்யும் தவறுகளை திருத்தி, நீதிமன்ற உத்தரவின்படி செயல் பட வேண்டும் என வலியுறுத்தாமல், தமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பிரச்சினைகள் திசை திருப்புவதற்காகதான் சனாதனத்தைப் பற்றிப் பேசி வருகிறார்கள்.
மோடியாக இருந்தாலும், ராகுல் காந்தியாக இருந்தாலும், காவிரி நீர் பிரச்சனைக்கு இதுவரை தீர்வு காணவில்லை. இதே நிலை நீடித்தால் தமிழகம் பாலைவனமாகும். இங்குக் குடிநீர் தட்டுப்பாட்டால் பஞ்சம் ஏற்பட்டு சோமாலியா, உகாண்டா நாடாக மாறும். எனவே, பொதுமக்கள் வரும் தேர்தலில் உண்மையானவர்களுக்கு வாக்களித்தால் போராடி பெற்றுத் தருவோம்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் அனைத்து குடும்பத் தலைவிக்கும் வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு, தகுதியின் அடிப்படையில் தொகை வழங்கியுள்ளது திமுகவின் ஏமாற்று வேலையாகும். தமிழக அரசு பெண் அர்ச்சகர்கள் நியமித்தது வரவேற்கத்தக்கது" என்று தினகரன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT