Published : 15 Sep 2023 03:59 PM
Last Updated : 15 Sep 2023 03:59 PM
சென்னை: தமிழக அரசு கொண்டு வந்த திட்டங்களை இன்றைக்கு இந்தியாவே உன்னிப்பாக கவனிக்கிறது. மற்ற மாநிலங்கள் பின்பற்றத் துடிக்குது. இண்டியா கூட்டணிக் கூட்டங்களுக்கு நான் மற்ற மாநிலங்களுக்கு போகும்போது அங்கே வரக்கூடிய அரசியல் தலைவர்களும், பிற மாநிலத்தினுடைய முதல்வர்களும் அரசு கொண்டு வருகின்ற திட்டங்களைப் பற்றி ஆர்வமாக கேட்கிறார்கள்" என்று கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். அவரது உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:
> சமீபத்தில் ஒரு வீடியோவை பார்த்தேன். அதில் ஒரு நிருபர், மக்களிடம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் 1000 ரூபாய் கொடுக்கப்பட்ட பிறகு என்ன செய்வீர்கள், என்று கேட்கிறார்… “சுருக்குப் பையில் பணம் இருந்தது என்றால் நிமிர்ந்து நடந்து போவேன்” என்று ஒரு பெண் சொன்னார். அதாவது, “சுருக்குப் பையில் பணம் இருந்தது என்றால் நிமிர்ந்து நடப்பேன்” என்று அவர் சொன்னார். இதைவிட இந்தத் திட்டத்துக்கும், எனக்கும் வேறு என்ன பெருமை வேண்டும்?
> இந்த ஆயிரம் ரூபாய் உங்கள் வாழ்க்கைக்கு உதவியாக இருக்கப் போகின்றது. நாள்தோறும் உதிக்கும் உதயசூரியன் போல உங்களுடைய இந்த உதயசூரியன் ஆட்சியும் உங்களுக்கு புத்துணர்ச்சியை வழங்க இந்த ஆயிரம் ரூபாய் பயன்படப்போகின்றது. இது திமுகவுடைய தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதி! மிகவும் முக்கியமான வாக்குறுதி.
> “இது நிறைவேற்ற முடியாத வாக்குறுதி, பொய்யான வாக்குறுதியை கொடுத்து மக்களை ஏமாற்றிவிட்டார்கள். இவர்களால் தர முடியாது” என்று பொய் பரப்புரையை தங்களுடைய உயிர்மூச்சாக வைத்து வாழுகின்ற சிலர் சொன்னார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் கொடுத்திருப்போம். ஆனால் நிதி நிலைமை சரியாக இல்லை. அதுனால்தான், நிதி நிலைமையை ஓரளவுக்கு சரி செய்துவிட்டு இப்போது கொடுக்கின்றோம். இதையும் சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை! பொய்களையும், வதந்திகளையும் கிளப்பி இந்த திட்டத்தை முடக்க நினைத்தார்கள்.
> தமிழக மக்களான நீங்கள் உதயசூரியன் சின்னத்தையும், எங்கள் கூட்டணிக் கட்சிகளுடைய சின்னங்களையும் வாக்கு இயந்திரத்தில் அழுத்தியதால்தான் முதல்வர் பொறுப்பில் உட்கார்ந்து உங்களுக்குத் தேவையானதை செய்து கொண்டு இருக்கிறேன். மக்கள் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்துகிறேன். மக்களுக்காகதான் பயன்படுத்துவேன்.
> இந்தத் திட்டம், இரண்டு நோக்கங்களைக் கொண்ட திட்டம். ஒன்று, பலனை எதிர்பாராமல் வாழ்நாளெல்லாம் உழைக்கக்கூடிய பெண்களுடைய உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம். இரண்டாவது நோக்கம், ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை கிடைக்கப் போகின்றது. இது பெண்களுடைய வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு சமூகத்தில் பெண்கள் வாழ உறுதுணையாக இருக்கும்.
> பெண் உடல்ரீதியாக எதிர்கொள்ளுகின்ற இயற்கை சுழற்சியைகூட தீட்டு என்று சொல்லி வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்தார்கள். ஓரமாக ஒதுக்கி வைத்தார்கள். படிக்கக் கூடாது, வேலைக்கு போகக் கூடாது, வீட்டுப்படியை தாண்டக் கூடாது, அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு? என்று பழமைவாத சிந்தனைகள வைத்து பெரும்பான்மை பெண்ணினத்தை முடக்கி வைத்தார்கள். இது அடித்தட்டு வகுப்பைச் சேர்ந்த பெண்கள் மட்டுமில்லை, உயர் வகுப்பைச் சேர்ந்த பெண்களும் அனுபவித்த துன்பம்.
> 8 வயதில், 10 வயதில் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். இவையெல்லாம் இன்றைக்கு மாறி இருக்கிறது. ஆனாலும், குழந்தைத் திருமணங்களை ஆதரித்து பேசுகின்ற பிற்போக்குவாதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு திராவிட இயக்கத்தின் மேல் வெறுப்பு, தீராத கோபம்... ஏனென்றால்..? சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியாது. அப்படி செய்தால், அது சட்டபடி குற்றம். கைம்பெண் விரும்பினால் மறுமணம் செய்துகொள்ளலாம். மறுமணம் செய்துகொள்ளக் கூடாது என்று யாரும் சொல்ல முடியாது.
> பெண் குழந்தைகள் அனைவரும் படிக்க பள்ளி - கல்லூரிக்கு வந்துவிட்டார்கள். இனி, உனக்கு படிப்பு எதுக்கு என்று சொல்ல முடியாது. நீ வேலைக்கு போகக் கூடாது என்று யாரும் தடுக்க முடியாது. இந்தச் சமூக சீர்திருத்த காலத்தை உருவாக்கியதுதான் திராவிட இயக்கம்.
> ஏழைக் குடும்பங்களையும், கிராமப் பொருளாதாரத்தையும் சுமக்கும் முதுகெலும்பாக பெண்கள்தான் இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் தன் திறனுக்கேற்ற பணிபுரிந்து பொருள் ஈட்டும் ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் அவருடைய தாய், சகோதரி, மனைவி என அந்த ஆணின் வீட்டுப் பெண்களுடைய பல மணிநேர உழைப்பு மறைந்திருக்கிறது.
> ஒரு ஆணினுடைய வெற்றிக்காகவும், தங்கள் குழந்தைகளுடைய கல்வி, உடல்நலம் காக்கவும், ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் பெண்கள் உழைத்திருப்பார்கள்? அதற்கெல்லாம் ஊதியம் கணக்கிட்டு கொடுத்தால் எவ்வளவு கொடுப்பது? ஆனால் ‘ஹவுஸ் ஒய்ஃப்’ என்று சிலர் சாதாரணமாக சொல்லிவிடுவார்கள்.
> என்னுடைய அரசியல் வாழ்க்கையில் சிறு சிறு சம்பவங்களைகூட துவக்க காலத்தில் என் அம்மாவிடம் சொல்லித்தான், தலைவர் கருணாநிதியிடம் சொல்லச் சொல்வேன். என் வாழ்க்கையில் எத்தனையோ மேடு,பள்ளங்கள். எல்லாவற்றிலும் எனக்கு உற்ற துணையாக, உறுதுணையாக இருந்து என்னுடைய மிகப் பெரிய சக்தியாக இருப்பது என்னுடைய மனைவி துர்காதான்.
> விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், நகைக்கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக் குழுக்கள் சுழல்நிதி, கடனுதவிகள் என்று மகளிருக்காக ஏராளமான திட்டங்களை நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது.
> இது எல்லாவற்றிக்கும் மகுடம் சூட்டக்கூடிய வகையில்தான் இந்தத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிருக்கு இனி மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்பட இருக்கிறது. இது உங்களுக்கான உதவித் தொகை இல்லை, உங்களுடைய உரிமைத் தொகை.
> நாம் கொண்டு வந்த திட்டங்களை இன்றைக்கு இந்தியாவே உன்னிப்பாக கவனிக்கிறது. மற்ற மாநிலங்கள் பின்பற்றத் துடிக்குது. இண்டியா கூட்டணிக் கூட்டங்களுக்கு நான் மற்ற மாநிலங்களுக்கு போகும்போது அங்கே வரக்கூடிய அரசியல் தலைவர்களும், பிற மாநிலத்தினுடைய முதல்வர்களும் சந்திக்கின்றபோது நம்முடைய அரசு கொண்டு வருகின்ற திட்டங்களைப் பற்றி ஆர்வமாக கேட்கிறார்கள். விசாரிக்கிறார்கள். தங்களுடைய மாநிலத்தில் செயல்படுத்துவதற்கு நினைக்கிறார்கள்.
> கடந்த வாரம் ஜி-20 நாடுகளின் மாநாடு டெல்லியில நடைபெற்றது. அதை முன்னிட்டு இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் ஒரு சிறப்பு விருந்து கொடுத்தார். அதில் நானும் கலந்து கொண்டேன். அப்போது, சில ஒன்றிய அமைச்சர்கள் கூட நமது சிறப்புத் திட்டங்கள் பற்றி விசாரித்தனர். இவை எல்லாம் ஏதோ எனக்கு தனிப்பட்ட கிடைத்திருக்கக்கூடிய பாராட்டுக்களாக நான் கருதவில்லை. தமிழக அரசுக்கும், நம்முடைய மக்களுக்கும் கிடைத்திருக்கக்கூடிய பாராட்டுகளாகத்தான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT