Published : 15 Sep 2023 12:35 PM
Last Updated : 15 Sep 2023 12:35 PM

சனாதன சர்ச்சை: அமைச்சர் உதயநிதி மீது நடவடிக்கை கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: சனாதனத்துக்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும்.

அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரணம். எனவே, இந்த மாநாட்டுக்கு மிகப் பொருத்தமான தலைப்பு வைத்திருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய பாராட்டுக்கள், என தெரிவித்திருந்தார். இது தேசிய அளவில் விவாதப் பொருளாகி பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. மேலும், பாஜக மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில், உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவில் வாழும் கோடிக்கணக்கான இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியுள்ளனர். எனவே, உதயநிதி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில், பல்வேறு வலதுசாரி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பொதுநல மனு உள்ளிட்ட வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகளை அவசர வழக்குகளாக உடனடியாக எடுத்து விசாரிக்க கோரி, வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு ஆஜரான வழக்கறிஞர்கள் சிலர் கோரிக்கை வைத்தனர். ஆனால், இதுபோன்ற முறையீடுகள் செய்வதற்கான நேரம் முடிந்த பின்னர், வழக்கறிஞர்கள் அவசர வழக்காக விசாரிக்க கோரி முறையீடு செய்தனர்.

இதனால், கோபமடைந்த தலைமை நீதிபதி, நீதிமன்ற நடைமுறைகளை முறையாக பின்பற்றி, முறையிட வேண்டும் என்று வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தினார். எனவே, வரும் திங்கள்கிழமை மீண்டும் முறையீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x