Published : 15 Sep 2023 11:23 AM
Last Updated : 15 Sep 2023 11:23 AM
ஓசூர்: ஓசூர் அரசுத்துறை வளாகத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால், அரசுத்துறை அதிகாரிகளும், பொதுமக்களும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
ஓசூர் அண்ணா சிலை அருகே வட்டாட்சியர் அலுவலகம், நீதிமன்றம், மகளிர் காவல் நிலையம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், போக்குவரத்துப் பிரிவு காவல் நிலையம், வருவாய்த் துறை அலுவலகம், புள்ளியியல் துறை உள்ளிட்ட அரசுத் துறை அலுவலகங்கள் ஒரே வளாகத்தில் உள்ளன. இந்த அலுவலகங்களுக்குத் தினசரி பல்வேறு பணிக்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். குறுகிய இடத்தில் இந்த வளாகம் உள்ளதால், வாகனங்கள் நிறுத்த இடம் இல்லை.
அதேபோல, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், இங்கு வரும் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இதனிடையே, இந்த வளாகத்தில் மின் விளக்கு இல்லாததால், இரவு நேரத்தில் இருளில் மூழ்கும் நிலையுள்ளது. இதைப் பயன்படுத்தி சிலர் இங்கு மது அருந்துவதும் அதிகரித்து வருகிறது. மேலும், வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவும் பழுதடைந்துள்ளது.
இது தொடர்பாக அரசு அலுவலர் கூறியதாவது: அரசின் அனைத்துத் துறை அலுவலகங்களும் ஒரே இடத்தில் உள்ளதால், பல்வேறு தேவைகளுக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இரவு வரை அரசுப் பணிகள் நடைபெறுவதால் இரவு 8 மணி வரை பணி செய்கிறோம். அலுவலக வளாகத்தில் உயர் கோபுர மின் விளக்குகள் இருந்தது.
அவை பழுது ஏற்பட்டதை தொடர்ந்து பழுது சீர் செய்யப்படவில்லை. இதனால், இரவு நேரத்தில் இருளில் மூழ்கும் நிலையுள்ளது. இரவு நேரத்தில் மகளிர் காவல்நிலையத்துக்குப் பெண்கள் புகார் அளிக்க வரமுடியாத நிலையுள்ளது. அதேபோல, நீதிமன்றத்துக்கு வரும் குற்றவாளிகள் தப்பிக்கும் வாய்ப்பும் உள்ளது.
இரவு நேரங்களில் குற்றச்சம்பவங்களும் நடைபெறுகிறது. குறிப்பாக, இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடு போய் வருகிறது. எனவே, வளாகத்தில் அனைத்து பகுதியிலும் மின் விளக்கு அமைக்கவும், பழுதான கண்காணிப்பு கேமராவைச் சீர் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT