Published : 09 Dec 2017 10:18 AM
Last Updated : 09 Dec 2017 10:18 AM
வேட்பு மனு பரிசீலனையில், தேர்தல் நடத்தும் அதிகாரியானவர் மூன்று முறையெல்லாம் தனது முடிவை மாற்றிச் சொல்ல முடியாது. அப்படி அவர் சொன்னதாக நடிகர் விஷால் நிரூபித்தால், ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெறும் வேட்பாளரை சட்டப்படி தகுதி நீக்கம் செய்யமுடியும் என்கிறார் ஜெயலலிதாவின் முன்னாள் வழக்கறிஞர் என்.ஜோதி.
விஷால் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக ‘தி இந்து’விடம் பேசிய ஜோதி, வேட்பு மனு தாக்கல் செய்யும் முறை குறித்தும் விளக்கினார்:
அதிமுக-வில் இருந்தவரை கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் அனைத்தையும் தலைமைக் கழகத்தில் உட்கார்ந்து முதலில் நான் பரிசீலனை செய்வேன். அத்தனை வேட்பு மனுக்களையும் நான் சரிபார்த்து, தவறுகள் இருந்தால் திருத்தம் செய்வேன். அதன்பிறகுதான் தேர்தல் முறைப்படி வேட்புமனுவை தாக்கல் செய்வார்கள்.
ஜெயலலிதாவின் வேட்பு மனுவை நான்தான் பூர்த்தி செய்வேன். ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். ஒரு தொகுதிக்கு தலா நான்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். ஒரு மனு தள்ளுபடியானாலும் இன்னொரு மனுவை ஏற்றுக்கொள்ள வைக்க முடியும் என்பதால் இந்த சிஸ்டத்தை வைத்திருக்கிறது தேர்தல் ஆணையம். மிக கவனமாகவே மனுவை பூர்த்தி செய்தாலும் ஜெயலலிதாவுக்கும் கட்டாயமாக நான்கு மனுக்களை நாங்கள் தயார் செய்வோம்.
முன்பெல்லாம் அனைத்து வேட்பாளர்களுக்குமே அவர்களது வேட்பு மனுவை இரண்டு பேர் முன் மொழிந்தால் போதும். ஆனால், சுயவிளம்பரத்துக்காக சுயேச்சைகள் அதிக அளவில் மனு தாக்கல் செய்வதைத் தடுக்க, அங்கீகரிப்பட்ட கட்சியின் வேட்பாளருக்கு இரண்டு பேரும் மற்றவர்களுக்கு பத்து பேரும் வேட்பு மனுவை முன்மொழிய வேண்டும் என 1996-ல் சட்டத் திருத்தம் வந்தது.
தனது வேட்பு மனு விவகாரத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி மூன்று விதமான முடிவுகளை எடுத்ததாக விஷால் சொல்கிறார். தேர்தல் அதிகாரி ஒருமுறை சொல்லிவிட்டால் அது அதர்மமாகவே இருந்தாலும் அதுதான் உத்தரவு. அதை எதிர்த்து இந்திய தலைமை தேர்தல் ஆணையரே கேள்வி கேட்க முடியாது. அது அநீதியான முடிவாக இருந்தால் சம்பந்தப்பட்ட வேட்பாளர் தேர்தல் முடிந்து 45 நாட்களுக்குள் நீதிமன்றத்தை நாடலாம். விஷால் நீதிமன்றத்தில் அப்படி தனது வாதத்தை நிரூபித்தால், ஆர்.கே.நகரில் வெற்றி பெறும் வேட்பாளரை நீதிமன்றமே தகுதி நீக்கம் செய்துவிடும். முன்பு, இளையான்குடி தொகுதியில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் சுப.மதியரசன், இப்படி நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வரலாறு இருக்கிறது.
எனவே, சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வதை விட்டுவிட்டு தேர்தல் ஆணையத்தின் கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறார். அதுவும், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு எழுதிய கடிதத்தை, உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தும் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் முகவரிக்கு எழுதிக் கொண்டிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT