Published : 15 Sep 2023 05:41 AM
Last Updated : 15 Sep 2023 05:41 AM
சென்னை: பாஜக தலைமை அழைப்பை ஏற்று டெல்லி சென்றுள்ள அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று சந்தித்து, மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற தேசியக் கட்சிகள் மற்றும் பல்வேறு மாநிலக் கட்சிகள் தற்போதே மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளைத் தொடங்கிவிட்டன. இதற்கிடையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் முழக்கத்தை பாஜக முன்னெடுத்துள்ளது.
காங்கிரஸ் தலைமையில் திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு மாநிலக் கட்சிகள் இடம்பெற்றுள்ள இண்டியா கூட்டணி மூன்று முறை கூடி, மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக விவாதித்து விட்டன. இது பாஜக தலைமைக்கு நெருடலை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.
மத்தியில் இருமுறை ஆட்சியைப் பிடித்த நிலையில், தொடர்ந்து மூன்றாவது முறையும் ஆட்சியைப் பிடிப்பதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதனால், அவ்வப்போது பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் கூட்டணிக் கட்சித் தலைவர்களையும், கூட்டணிக் கட்சி எம்.பி.க்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் வலுப்பெறத் துடிக்கும் பாஜக, வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் கணிசமான இடங்களில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற வேண்டுமென்பதில் உறுதியாக உள்ளது.
இந்த சூழலில், பாஜக கூட்டணியில் உள்ள பெரிய கட்சியான அதிமுகவின் பொதுச் செயலாளர் பழனிசாமியுடன், மக்களவைத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த பாஜக தலைமை அழைப்பு விடுத்திருந்தது. அதை ஏற்று பழனிசாமி நேற்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு நேற்றிரவு அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.
தமிழக அரசியல் நிலவரம்: இந்த சந்திப்பில் தமிழக அரசியல் நிலவரம், திமுக கூட்டணியின் தற்போதைய நிலை, அதிமுக கூட்டணியின் தற்போதைய பலம், பாமக மற்றும் தேமுதிக கட்சிகளின் தற்போதைய நிலைப்பாடு, முன்கூட்டியே தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதை எதிர்கொள்வது, தொகுதிப் பங்கீடு, தமிழகத்தில் பாஜக போட்டியிட விரும்பும் தொகுதிகள், வரும் 18-ம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் கொண்டுவரப்பட உள்ள மசோதாக்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT ( 3 Comments )
உடல் மொழி என்னவோ மகாராஜா போல் இருக்கிறது
0
0
Reply
போயஸ் தோட்டம் வந்து உள்ளே கூப்பிட மாட்டாரா என்று ஏங்கி தவித்தவர்கள்... இன்றைக்கு டெல்லிக்கு அழைத்து கால் மேல் கால் போட்டு அமர்ந்து ஆணையிடுகின்றார்கள். ஏதோ இளைத்தால் எதுக்கோ கொண்டாட்டமாம்.
1
0
Reply