Published : 06 Dec 2017 11:06 AM
Last Updated : 06 Dec 2017 11:06 AM

குமரி, கேரளத்தில் கள ஆய்வு, உரையாடல்கள் மூலம் மீனவர்களுக்கு நம்பிக்கையளித்த நிர்மலா சீதாராமன் - கிராமங்கள்தோறும் சென்று மீட்புப் பணிகள் குறித்து விளக்கினார்

ஒக்கி புயலால் குமரி மாவட்டமும், கேரள மாநிலமும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரடி கள ஆய்வு மேற்கொண்டு மீட்புப் பணிகளை துரிதப்படுத்தியது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு கடந்த 3-ம் தேதி மாலை 5 மணிக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்தார். குமரியில் ஹெலிகாப்டர் தளத்திலேயே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்களிடமும் ஆலோசனை நடத்தினார்.

அமைச்சர் நேரடி விளக்கம்

சுசீந்திரம் பகுதியில் பழையாற்று வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சேறு மற்றும் சகதியில் நடந்து சென்று மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். திருப்பதிசாரம், சுங்கான்கடை, குருந்தன்கோடு ஆகிய பகுதிகளில் சேதங்களை பார்வையிட்ட பிறகு, பாதுகாப்பு குறைபாடுகளை போலீஸார் சுட்டிக்காட்டியதையும் மறுத்து மீனவ கிராமங்களுக்கு சென்றார்.

இரவு 9 மணியளவில் நீரோடி மீனவ கிராமத்துக்குள் சென்ற அவர், அங்கு தேவாலய பங்கு தந்தைகள் சகிதம், திரண்டிருந்த 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்களை நேரில் சந்தித்தார். மாயமான மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து, கடலோர காவல் படைய தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது என்பதை, ஜி.பி.எஸ். கருவியின் மூலம் நேரடியாகவே விளக்கினார்.

இரவு 11 மணியளவில் கிராத்தூர் மீனவ கிராம மக்களைச் சந்தித்தப் பிறகு நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் இரவு 12 மணியளவில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கேரளத்திலும் ஆய்வு

திருவனந்தபுரம் அருகே விழிஞ்ஞத்தில் மீனவர்களின் எதிர்ப்புக் குரல்களுக்கு மத்தியில் பேசிய நிர்மலா சீதாராமன், ‘மீன் பிடி உபகரணங்கள் சேதம் அடைந்துள்ளன. எப்படி தொழில் செய்ய முடியும் என்கிறீர்கள். நியாயமான கேள்வி. மாநில அரசிடம் இருந்து அறிக்கை வரும். நான் டெல்லியில் உங்கள் துயரங்களைத் சொல்கிறேன். நிச்சயம் நல்லது செய்யச் சொல்கிறேன் என்றார்.

‘மீனவரை, இன்னொரு மீனவரே மீட்டு வந்துள்ளார். இதை கடலோர காவல் படை ஏன் செய்யவில்லை?’ என்ற பங்குத்தந்தை ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த அவர், ‘இதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், கடலோர காவல் படைக்கு இதில் என்ன தனிப்பட்ட விருப்பு, வெறுப்பா இருக்கிறது? ஒவ்வொருவருமே இந்திய தேசத்தின் மீனவர்கள்தான். கிடைத்தால் அனைவரும் அழைத்து வரக் கூடியவர்கள்தான்’ என்று விளக்கமளித்தார். ‘மாயமான மீனவர்கள் வீடு வருவதே இப்போது முக்கியம். என் முயற்சியை கைவிட மாட்டேன். அனைவரும் சேர்ந்து பணி செய்வோம்’ என்றார்.

அரசு இயந்திரங்கள் மீதான பிடிப்பு குறைந்து போயிருந்த நிலையில் பாதுகாப்பு அமைச்சரின் நேரடி கள ஆய்வு மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x