Published : 15 Sep 2023 07:39 AM
Last Updated : 15 Sep 2023 07:39 AM

நடப்பாண்டில் ஆகஸ்ட் வரை 1,052 கொலை வழக்குகள் பதிவு - தமிழக காவல் துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டில் ஆகஸ்ட் வரை 1,052 கொலை வழக்குகள் பதிவாகி உள்ளதாக தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் கொலை குற்றங்கள் அதிகமாகிவிட்டதாக சமூக ஊடகங்கள், பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி வருகின்றன. தென் மண்டலத்துக்குட்பட்ட மாவட்டங்களில் 2022 ஆகஸ்ட் வரை 364 கொலைகள் நடந்திருந்தன. நடப்பாண்டில் ஆகஸ்ட் 2023 வரை 323 கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இது கடந்த ஆண்டை விட குறைவானதாகும்.

திருநெல்வேலி மாவட்டத்தை பொறுத்தவரை 2022 ஆகஸ்ட் வரை 35, நடப்பாண்டு ஆகஸ்ட் வரை 30 கொலைகள் நடந்துள்ளன. அந்தவகையில் 14 சதவீத கொலைகள் குறைந்துள்ளன. அதேபோல், நெல்லை மாநகரில் 2022 ஆகஸ்ட் வரை 15, நடப்பாண்டில் ஆகஸ்ட் வரை 11 கொலைகள் என கடந்த ஆண்டைவிட 27% குறைந்துள்ளது.

தென் மண்டலங்களில் இரு வேறு சமூகத்தினரிடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் வரை 82 கொலை வழக்குகளும், நடப்பாண்டில் ஆகஸ்ட் வரை 74 வழக்குகளும் பதிவாகி உள்ளன. அந்தவகையில் சாதிரீதியான கொலைகளும் குறைந்துள்ளன. அதேபோல், திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஆண்டைவிட 30 சதவீதமும், மாநகரத்தில் 43 சதவீதமும் சாதிய கொலைகள் குறைந்துள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் வரை 1,090 கொலை வழக்குகளும், நடப்பாண்டில் ஆகஸ்ட் வரை 1,052 கொலை வழக்குகளும் பதிவாகி உள்ளன.அதன்படி, தமிழகத்தில் கொலை வழக்குகள் கடந்தாண்டைவிட குறைந்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x