Published : 12 Dec 2017 10:09 AM
Last Updated : 12 Dec 2017 10:09 AM

‘ஒரே வீட்டில் கடலுக்குச் சென்ற 4 பேர் வீடு திரும்பாத சோகம்’: மீனவ குடும்பத்தின் கண்ணீர் கதை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலுக்குச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரை காணவில்லை. ஒருவர் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். மூன்றே மாதங்களில் இச்சோகம் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் சின்னத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் ரெம்மியாஸ்(57). இவரது மனைவி செல்வராணி(50) இவர்களுக்கு ரகேஷ் என்ற மகனும், 3 மகள்களும் உள்ளனர்.

ரெம்மியாஸ், தனது மகள் ரெம்ஷா ராணியின் கணவர் ஆன்றனி உட்பட 6 பேருடன் கேரள மாநிலம் வேப்பூரில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் மீன்பிடிக்க சென்றார். அக்.11-ம் தேதி கப்பல் ஒன்று இவர்கள் சென்ற விசைப் படகின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

விசைப்படகு கடலுக்குள் மூழ்கியதில், 2 பேர் மட்டும் அந்த வழியாக வந்த மற்ற மீனவர்களின் விசைப்படகில் ஏறி கரைக்கு வந்தனர். ரெம்மியாஸ் உட்பட மூவரை காணவில்லை. ரெம்மியாஸின் மருமகன் ஆன்றனியின் உடல் மட்டும் கிடைத்தது.

பாதிக்கப்பட்டோர் கேரள அரசிடம் பலமுறை மனு கொடுத்தும், விபத்துக்கு காரணமான கப்பலைக் கண்டுபிடிக்கக்கூட கேரள அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது.

ரெம்மியாஸின் மற்றொரு மகள் ரெபிஷா ராணி ‘தி இந்து’விடம் கூறியதாவது: என் தந்தையை இதுவரை மீட்கவில்லை. என் சகோதரியின் கணவர் உடல் கிடைத்தது. கேரள அரசு நிவாரணம் வழங்கவில்லை.

அப்பாவை மீட்க முடியாததால், துபாயில் மீன்பிடித் தொழில் செய்து கொண்டிருந்த என் அண்ணன் ரகேஷ்(31) ஊருக்கு வந்தார். வீட்டின் ஆலமரமாக இருந்த அப்பா இல்லை. 3 உடன் பிறந்த சகோதரிகளில் ஒருவரின் கணவர் இறந்து விட்டார். அத்தனை பாரத்தையும் சுமக்கிறேன் என சொல்லி விட்டு கடல் தொழிலுக்கு சென்றார்.

கடந்த 29-ம் தேதி அதிகாலை தேங்காய்பட்டினத்தில் இருந்து ரகேஷ்(31), என் இன்னொரு சகோதரியின் கணவர் ஆன்றோ ஜெயின்(37) உள்ளிட்ட சிலர் மீன்பிடிக்க சென்றனர். இன்றுவரை திரும்பவில்லை. இப்போது எனக்கு அப்பா இல்லை. என் உடன் பிறந்த ஒரே சகோதரன் ரகேஷ் இல்லை. என்னுடைய 2 சகோதரிகளின் கணவர்கள் இல்லை. நானும் கல்யாண வயதில் நிர்கதியாய் நிற்கிறேன் என்று கூறி கண் கலங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x