Published : 15 Sep 2023 04:48 AM
Last Updated : 15 Sep 2023 04:48 AM
தருமபுரி: தருமபுரி மாவட்டம் சின்னப்பள்ளத்தூர் அரசுப் பள்ளி மாணவர்கள் உண்டியல் சிறுசேமிப்பை பயன்படுத்தி புத்தகத் திருவிழாவில் புத்தங்களை வாங்கிச் சென்றனர்.
தருமபுரியில் மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தகப் பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் ஏற்பாட்டில் 5-ம் ஆண்டு புத்தகத் திருவிழா வள்ளலார் திடலில் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு தருமபுரி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடந்தது. கடந்த ஆண்டு புத்தகத் திருவிழாவுக்கு பென்னாகரம் ஒன்றியம் சின்னப்பள்ளத்தூர் அரசு நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியரை அப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனி தலைமையிலான ஆசிரியர்கள் அழைத்து வந்திருந்தனர்.
அப்போது, ‘அடுத்த ஆண்டு புத்தகத் திருவிழாவின்போது புத்தகங்கள் வாங்கும் வகையில் மாணவ, மாணவியர் அனைவரும் உண்டியலில் பணம் சேர்த்து வையுங்கள்’ என்று அறிவுறுத்தி அனைத்து மாணவ, மாணவியருக்கும் தலைமை ஆசிரியர் பழனி, புத்தகத் திருவிழா அரங்கில் தனித்தனி உண்டியல்கள் வாங்கிக் கொடுத்தார். அந்த உண்டியல் சிறுசேமிப்புடன் நடப்பு ஆண்டு புத்தகத் திருவிழாவுக்கு அந்த மாணவ, மாணவியர் 100-க்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர். உண்டியலில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த பணத்துக்கு ஏற்ப அவர்கள் ஆர்வத்துடன் புத்தகங்களை தேடித்தேடி வாங்கினர். மேலும், அனைத்து மாணவ, மாணவியருக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் பழனி திருக்குறள் புத்தகங்களை வாங்கி பரிசளித்தார்.
உண்டியல் சேமிப்பின் மூலம் புத்தகங்கள் வாங்கிய அரசுப் பள்ளி மாணவ, மாணவியரை தகடூர் புத்தகப் பேரவை அமைப்பின் செயலாளர் மருத்துவர் செந்தில், தலைவர் சிசுபாலன் ஆகியோர் பாராட்டியதுடன், சிறுசேமிப்பு மற்றும் வாசிப்புப் பழக்கங்களை வாழ்வில் எந்த நிலையிலும் தொடர வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிகழ்ச்சியின்போது, புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்களான ஆசிரியர்கள் தங்கமணி, கோவிந்தசாமி, சின்னப்பள்ளத்தூர் பள்ளி ஆசிரியர்கள் பழனிச்செல்வி, கல்பனா, திலகவதி, ரேக்கா, ராஜேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT