Published : 14 Sep 2023 06:49 PM
Last Updated : 14 Sep 2023 06:49 PM
சென்னை: அண்ணா பிறந்தநாளை ஒட்டி, கோவை குண்டுவெடிப்பு வழக்கு கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்த வழக்கில், உரிய ஆவணங்களை இணைக்கவில்லை எனக் கூறி, விசாரணைக்கு ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ்நாடு ஹிந்து இயக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜலேந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி கோவையில் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த அத்வானியை கொலை செய்யும் திட்டமிட்ட, அல் உம்மா அமைப்பினர் 18 இடங்களில் தொடர் குண்டிவெடிப்புகளை நிகழ்த்தினர். இதில் 58 பேர் பலியாகினர், 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், அல் உம்மா தலைவர் பாஷா உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிலருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.
இந்த வழக்கில் தண்டிக்கப்பட்ட 20 பேர் தற்போது சிறையில் உள்ளனர். அவர்களை அண்ணா பிறந்தநாளை ஒட்டி விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பெற இவர்களை விடுதலை செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. எனவே, கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்யக் கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, ‘49 கைதிகளை விடுதலை செய்ய ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது. அதன் மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை’ என்று கூறி, கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக விதிகள் வகுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை தாக்கல் செய்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், குண்டுவெடிப்பு வழக்கின் தீர்ப்பு நகல் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல், முறையான ஆதாரங்கள் இல்லாமல் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அதிருப்தி தெரிவித்து, வழக்கை முடித்து வைத்தனர்.
பயங்கரவாத தடுப்பு சட்டங்களில் தண்டிக்கப்பட்டவர்கள் விடுதலை பெற தகுதியில்லை என அரசாணையில் கூறப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், குற்ற வழக்கின் தீர்ப்பின்படி அவர்கள் விடுதலை பெற தகுதியில்லை என தெரிந்தால், அதை எதிர்த்து வழக்கு தொடர மனுதாரருக்கு அனுமதியளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT