Last Updated : 14 Sep, 2023 07:09 PM

60  

Published : 14 Sep 2023 07:09 PM
Last Updated : 14 Sep 2023 07:09 PM

“சனாதனத்தை ஏற்றுக் கொண்டோரை நாங்கள் எதிர்க்கவில்லை. மாறாக...” - அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக முன்னேற்பாடு திருப்பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.

சேலம்: “சனாதனத்தை ஏற்றுக் கொண்டவர்களை எல்லாம் நாங்கள் எதிர்க்கவில்லை. மாறாக, சனாதனத்தில் உள்ள ஒரு சில கோட்பாடுகளையே நாங்கள் எதிர்க்கிறோம்” என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு வியாழக்கிழமை சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் நடந்து வரும் திருப்பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் நிலுவையில் உள்ள கோயில் திருப்பணிகளை விரைந்து முடித்து குடமுழுக்கு நடத்த உத்தரவிட்டார். அதன்படி 12 ஆண்டுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாஜகவினர் திமுக ஆட்சி மீது வேண்டுமென்றே குறை கூறுகிறார்கள்.

சனாதனம்: “இந்த ஆட்சியின் மீது குறை சொல்வதற்கு எந்தப் பொருளும் கிடைக்கவில்லை. கையில் எதுவும் கிடைக்காததால், குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தினமும் ஓர் உளறலை உளறிக் கொண்டிருக்கிறார். குழம்பி போயிருக்கிறார். தமிழகத்தில் அடுத்த என்ன செய்வது, ஏது செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போயுள்ளார். என் மண் என் மக்கள் முழுவதும் படுதோல்வி அடைந்துவிட்டது.

சனாதனத்தை ஏற்றுக் கொண்டவர்களை எல்லாம் நாங்கள் எதிர்க்கவில்லை. மாறாக, சனாதனத்தில் உள்ள ஒரு சில கோட்பாடுகளைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். பெண் கல்வி மறுப்பு, கணவன் இறந்தவுடன் கைம்பெண்கள் உடன்கட்டை ஏறுதல், குலக்கல்வி திட்டம் உள்ளிட்ட கோட்பாடுகளை தான் நாங்கள் எதிர்க்கிறோம். முதல்வர் ஸ்டாலின் எங்காவது ஒரு இடத்தில் இந்து மதத்தை ஏதாவது ஒருவகையில், குற்றம் சுமத்தியோ, பழி சுமத்தியோ பேசியிருக்கிறார் என்று குறிப்பிட்டுக் காட்ட முடியுமா? இறை நம்பிக்கை என்பது அவரவருடைய விருப்பம். அதில் எப்போதுமே, திமுக தலையிட்டது கிடையாது. சமத்துவத்தின் ஓர் அங்கம்தான் திமுக.”

ரூ.5213 கோடி மதிப்பிலான கோயில் சொத்து மீட்பு: இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலங்கள் இதுவரை 1.50 லட்சம் ஏக்கர் அளவீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது, தருமபுரியில் 1.51 லட்சம் ஏக்கர் நிலத்தை அளவீடு செய்து கல் பதிக்கும் பணி நடைபெறவுள்ளது. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை ரூ.5,213 கோடி மதிப்பிலான இந்து சமய அறநிலையத் துறையின் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. சுமார் 1,044 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த காசி விசுவநாதர் கோயிலில் குடமுழுக்கு விழா மேற்கொள்ளப்பட்டது. இது அனைத்து தரப்பினராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது.

100 கோயில் புனரமைக்க ரூ.160 கோடி நிதி: மேலும், 1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயில்களுக்கு கடந்தாண்டு ரூ.100 கோடி அரசு மானியம் மற்றும் ரூ.40 கோடி உபயதாரர்கள் நிதியுதவி என மொத்தம் ரூ.140 கோடி 137 கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோல் நடப்பாண்டு மேலும் 100 கோயில்களைப் புனரமைப்பதற்கு தமிழக அரசு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடும், ரூ.60 கோடி உபயதாரர்கள் நிதியுதவி என மொத்தம் ரூ.160 கோடி மதிப்பில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அனைத்து சாஅதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டப்படி 38 பேர் அர்ச்சகராகி உள்ளனர். அனைத்து கோயில்களிலும் முறைகேடுகள் தடுக்கப்படும். மக்களாட்சி வந்தபின் இந்து கோயில்கள் இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மற்ற மத கோயில்களை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர சட்டம் இல்லை. இறை நம்பிக்கை அவரவர் விருப்பம். சமத்துவம் அங்கம் வகிக்கும் ஆட்சி திமுக இதனால் இறை நம்பிக்கை உள்ளவர்களையும் வரவேற்கிறோம், இறை நம்பிக்கை இல்லாதவர்களையும் வரவேற்கிறோம்.

அக்27-ல் கோட்டை மாரியம்மன் கோயில் குடமுழக்கு: சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருப்பணி கடந்து 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டுவரை 10 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது 90 சதவீத பணிகள் நிறைவுற்று ரூ.4.35 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 850 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோட்டை மாரியம்மன் கோயில் குடமுழக்கு விழா அடுத்த மாதம் 27-ம் தேதி நடைபெற உள்ளது. பக்தர்கள் வேண்டுகோளுக்கிணங்க ரூ.4.5 லட்சம் செலவில் தங்க தேர் புனரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதனை கும்பாபிஷேக நாளிலேயே பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது ஆட்சியர் கார்மேகம், மேயர் ராமச்சந்திரன், டிஆர்ஓ மேனகா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சபர்மதி, எம்எல்ஏ ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x