Published : 14 Sep 2023 04:18 PM
Last Updated : 14 Sep 2023 04:18 PM
மதுரை: முதன்மைப் பொதுச் செயலாளரான துரை. வைகோ மதிமுகவுக்கு வருகைக்குப் பின் மதுரையில் நடக்கும் அக்கட்சியின் மாநில மாநாடு தொண்டர்களுக்குப் புத்துணர்வை ஏற்படுத்தும் என, கட்சியின் முன்னணி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அண்ணாவின் பிறந்த நாளை (செப்.15-ம் தேதி) முன்னிட்டு கட்சியின் மாநில மாநாட்டை நடத்துவது வழக்கம். இந்த மாநாட்டின் மூலம் கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதோடு எப்போதும் எழுச்சியுடன் செயல்படும் வகையில் தொண்டர்களைத் தயார்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்வார்.
இந்நிலையில், அண்ணாவின் 115-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் பிரம்மாண்ட மாநாடு நடத்துவதென கட்சி நிர்வாகம் முடிவெடுத்து பொதுச் செயலாளர் வைகோ அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, மதுரை வலையங்குளம் பகுதியில் நாளை மாநாடு நடைபெறுகிறது. இதற்கான பந்தல் அமைக்கும் பணி மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடங்கள் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளன.
இதற்கான பணிகளை மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ புதூர் பூமிநாதன், மாநகர் மாவட்டச் செயலர் முனியசாமி மற்றும் மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினர் செய்துள்ளனர். 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வைகோவின் மகன் துரை வைகோவின் கட்சி செயல்பாடுகள் மற்றும் அவர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற தொண்டர்களின் பெரும் எதிர்பார்ப்பு இந்த மாநாட்டின் மூலம் தெரிய வரும்.
துரை வைகோ கட்சியின் முதன்மைச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கும் நிலையில் அவருக்கு இது முதல் மாநாடாகும். மாநாட்டுக்காக மாநிலம் முழுவதும் இருந்த மதிமுகவினர் லட்சக் கணக்கானோர் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநாடு குறித்து கட்சியின் துணைப் பொதுச் செயலர் ராஜேந்திரன், செய்தித் தொடர்பாளர் மின்னல் முகமது அலி, பூமிநாதன் எம்எல்ஏ ஆகியோர் கூறியதாவது: கட்சி தொடங்கி சுமார் 30 ஆண்டுகளாகிவிட்டன. ஒவ்வொரு ஆண்டும் அண்ணாவின் பிறந்த நாளை மாநில அளவில் மாநாடு நடத்தி கொண்டாடும் ஒரே கட்சி மதிமுக மட்டுமே. அந்தளவுக்கு அண்ணா மீது பொதுச் செயலாளர் வைகோ பற்றுக்கொண்டவர்.
மதிமுக தெற்குப் பகுதியில் வலுவாக காலுன்றிய இயக்கம் என்பதால் இம் மாநாடு பெரிய எழுச்சியை உருவாக்கும். துரை. வைகோ கட்சியில் சேர்ந்து முதன்மைச் செயலாளரான பிறகு நடக்கும் முதல் மாநாடு. அவரது வருகை கட்சியினருக்கு உற்சாகத்தை தந்துள்ளது. தொண்டர்களுக்கு புத்துணர்வையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது.
இம்மாநாடு துரை.வைகோவின் அரசியல் அங்கீகாரத்துக்கு திருப்பு முனையை ஏற்படுத்தும். இதை மாநாட்டில் எதிர்பார்க்கலாம். மதிமுக வலுவாக வேர் ஊன்றி இருக்கும் தென் தமிழகத்தில் மாநாடு நடப்பதால் பல்வேறு எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளன. பல லட்சம் பேர் கூடுவர் என்ற எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT