Published : 14 Sep 2023 12:30 PM
Last Updated : 14 Sep 2023 12:30 PM
சென்னை: ஆவின் நெய் விலை லிட்டருக்கு 70 ரூபாயும், அரை லிட்டருக்கு 50 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று (செப்.14) முதல் அமலுக்கு வந்துள்ளது.
தமிழக அரசின் ஆவின் நிர்வாகம் பால், தயிர், வெண்ணெய், நெய், உள்ளிட்ட பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. பொதுமக்களிடம் நேரடியாக பால் கொள்முதல் செய்யும் ஆவின் நிர்வாகம், நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்கிறது. இதுதவிர, ஆவின் பாலகங்களில் விற்பனை செய்யப்படும், ஐஸ் கிரீம் மற்றும் பால் பொருட்களால் செய்யப்பட்ட இனிப்பு வகைகளுக்கும் மக்களிடையே வரவேற்பு இருந்து வருகிறது.
இந்நிலையில், ஆவின் நிறுவனம் நெய் மற்றும் வெண்ணெயின் விலைகளை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, 15 மி.லி. பாக்கெட் நெய் ரூ.14-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு ரூபாய் உயர்த்தி ரூ.15-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 100 மி.லி நெய் பாக்கெட் , பத்து ரூபாய் அதிகரித்து, ரூ.80-க்கும், ரூ.315-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த அரை லிட்டர் நெய் 50 ரூபாய் அதிகரித்து, ரூ.365-க்கும், ரூ.630-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு லிட்டர் நெய் 70 ரூபாய் அதிகரித்து, ரூ.700க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், ரூ.260-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த அரை கிலோ வெண்ணெய், 15 ரூபாய் அதிகரித்து, ரூ.275-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகைக் காலங்கள் நெருங்கி வரும் சூழலில் ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT