Published : 14 Sep 2023 05:58 AM
Last Updated : 14 Sep 2023 05:58 AM

குவாரி அதிபர்கள், ஒப்பந்ததாரர்களின் வீடு, அலுவலகங்களில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை

சென்னை: தமிழகத்தில் மணல் குவாரி அதிபர்கள், ஒப்பந்ததாரர்களின் வீடு, அலுவலகங்களில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடந்தது.

தமிழக அரசின் நீர்வளத்துறையின் சார்பில் ஆன்லைன் முன்பதிவு மூலம் விற்பனை செய்யப்படும் ஆற்று மணல் விற்பனையில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இதையடுத்து, நேற்று முன்தினம் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், வேலூர், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில், மணல் குவாரி, சேமிப்பு கிடங்கு அதிபர்கள், அவர்களுக்கு நெருக்கமானவர்கள் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

சென்னை எழிலகம் வளாகத்தில் உள்ள கனிம வளத்துறை அலுவலகம், அண்ணாநகரில் ஆடிட்டர் சண்முகராஜ் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்தது. இதில் சென்னையிலும், மற்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் நடைபெற்ற சோதனை நேற்று முன்தினம் இரவோடு நிறைவடைந்தது.

இந்நிலையில், திண்டுக்கல், புதுக்கோட்டை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று 2-வது நாளாக சோதனை தொடர்ந்தது. திண்டுக்கல்லில் தொழிலதிபர் ரத்தினம் மற்றும் அவரது உறவினரான ஹனீபா நகரில் வசிக்கும் கோவிந்தனின் வீட்டில் சோதனை நடைபெற்று வந்தது. இதில் கோவிந்தனின் வீட்டில் நேற்று முன்தினம் இரவு சோதனை நிறைவடைந்த நிலையில், ரத்தினம் வீட்டில் 2-வது நாளாக நேற்றும் சோதனை நடத்தப்பட்டது.

சுமார் 31 மணி நேரம் தொடர்ச்சியாக இவரது வீட்டில் நடைபெற்ற சோதனை மாலையில் நிறைவடைந்தது. இதையடுத்து அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை கணக்கீடு செய்வதற்காக, நேற்று மாலையில் வங்கி ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். அப்போது, நகைகளை அளவிடும் தராசுகளை அவர்கள் கொண்டு சென்றனர்.

இதேபோல், நாமக்கல் மாவட்டம் மோகனூரில் அரசு மணல் சேமிப்பு கிடங்கில் நேற்று 2-வது நாளாக 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டையில், வல்லத்திராகோட்டை அருகே உள்ள முத்துப்பட்டணத்தைச் சேர்ந்த மணல் ஒப்பந்ததாரரும், கம்பன் கழகத் தலைவருமான எஸ்.ராமச்சந்திரனின் வீடு, அலுவலகம் மற்றும் நெருக்கமானவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நேற்றும் தொடர்ந்தது.

வம்பன் பகுதியில் தொழிலதிபர் ரத்தினத்தின் வேளாண் கல்லூரி மற்றும் இவர்களுக்கு நெருக்கமான சண்முகம், முருகபாலா ஆகியோரின் வீடுகளில் நேற்று முன்தினம் சோதனை நிறைவடைந்தது. ஆனாலும், கூடுதலாக, கறம்பக்குடி அருகே குளந்திரான்பட்டு கிராமத்தில் உள்ள மணல் ஒப்பந்ததாரர் கரிகாலன், புதுக்கோட்டையில் அரசு ஒப்பந்ததாரர் கர்ணன், ஆடிட்டர் முருகேசன் ஆகியோரின் வீடுகள், அலுவலகத்திலும் நேற்று காலை முதல் இரவு வரை சோதனை நடந்தது. நேற்று நடைபெற்ற சோதனையில் சில இடங்களில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. எனினும், அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை அமலாக்கத் துறை வெளியிடவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x